உடல்நலக் குறைவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த நடிகர் பாவா லட்சுமணனுக்கு தமிழக அரசின் சார்பில் மனிதநேய உதவி கிடைத்துள்ளது. அமைச்சர் ராஜ்மோகன் தலையீட்டின் மூலம் சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் தங்குவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போது அவர் அங்கு குடியேறியுள்ளார். இந்த சம்பவம் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் பாவா லட்சுமணன், ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சமீப காலமாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக திரைப்பட வாய்ப்புகளும் குறைந்ததால் பொருளாதார சிக்கலையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்துடன் வசிப்பதற்கே சிரமமான சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலர் பாவா லட்சுமணனின் நிலை அறிந்து அவருக்கு நிதியளித்து உதவினர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணன் பாவா லட்சுமணனின் மருத்துவ செலவிற்காக 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
வீடு ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
இந்த நிலைமை குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ராஜ்மோகன், நடிகருக்கு உடனடி உதவி வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் அரசின் சார்பில் தங்குவதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாவா லட்சுமணன் அங்கு குடியேறியுள்ளார். அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையுலகில் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைஞர்கள் வயது முதிர்வு அல்லது உடல்நலக் குறைவு காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன. அத்தகைய சூழலில் பாவா லட்சுமணனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உதவி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அமைச்சர் ராஜ்மோகனின் நடவடிக்கையை வரவேற்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாவா லட்சுமணனின் உடல்நலம் விரைவில் குணமடைந்து அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருக்கு மேலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும், அரசும் திரையுலகினரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அவருக்கு பாதுகாப்பான தங்குமிடம் கிடைத்திருப்பது அவரது சிகிச்சை மற்றும் உடல்நல மீட்சிக்கு முக்கியமான ஆதரவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விரிவாக விசாரித்தார். "உங்களுக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களுடைய சகோதரன் நான். உங்க நேர்காணலைப் பார்த்தேன். அதில் கேப்டன் இருக்கும்போது உங்க நிலைமை நன்றாக இருந்ததாக சொன்னீர்கள். கேப்டனின் தம்பிகளாக தான் நாங்கள் இருக்கோம். மான்புமிகு முதல்வர் விஜய் ஆட்சியில் நலிந்த கலைஞர்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம். நீங்கள் கவலையே படாதீர்கள். உங்களுக்காக ஒரு முழு ஏற்பாடு செய்வது வரை நீங்கள் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருங்கள். என்னால் முடிந்த எல்லாமே நாங்கள் உங்களுக்கு செய்கிறேன் கூடிய விரைவில் உங்களை திரையில் பார்க்க விரும்புகிறேன். " என அமைச்சர் ராஜ்மோகன் பாவா லட்சுமணனிடம் தெரிவித்தார்
