எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இருவரும் அறிமுகமான படம் ஆயிரத்தில் ஒருவன் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆம் அதில் உண்மையும் இருக்கிறது. கொஞ்சம், உண்மையை கடந்து ஒரு புரிதலும் தேவைப்படுகிறது. ஆம், 

எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா ஜோடியாக முதன் முதலில் ஒப்பந்தமான திரைப்படம் கன்னித் தாய் திரைப்படம் தான். ஆனால், முதலில் வெளியானது என்னவோ, ஆயிரத்தில் ஒருவன். எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நம்பியார், அசோகன், நாகேஷ், ஆகியோர் நடிப்பில் ,தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1965ம் ஆண்டு இதே நாள், செப்டம்பர் 10 ம் தேதி வெளியானது கன்னித்தாய். 

எம்.ஜி.ஆர்., படத்தில் பார்க்க வேண்டிய டாப் 10 படங்களை பட்டியல் இடுவோர், கன்னித்தாய் படத்தையும் அதில் சேர்த்துள்ளனர். அந்த அளவிற்கு கன்னித்தாய் திரைப்படம், எம்.ஜி.ஆர்.,யின் நடிப்புக்கு பெயர் போன படம் என்கிறார்கள். ஆனால், அத்திரைப்படம் வெற்றி பெற்றதா என்றால், ஆம் வெற்றி பெற்றது; பெரிய வெற்றியை பெறவில்லை. சுமாரான வெற்றியாகே அது இருந்தது. 

தேவர் ஃப்லிம்ஸ்-எம்.ஜி.ஆர்., கூட்டணியில் 16 வெற்றி படங்கள் கிடைத்தன. அதில் கொஞ்சம் சுமாராக போன ஒரே திரைப்படம் கன்னித்தாய் தான். 

இதோ தேவர் ஃப்லிம்ஸ் உடன் எம்.ஜி.ஆர்., நடித்த திரைப்படங்களும் அதன் வெற்றி விபரமும்:

 

படம் ஆண்டு வெற்றி
தாய்க்குப் பின் தாரம் 1956 மாபெரும் வெற்றி
தாய் சொல்லை தட்டாதே 1961 மெகா ஹிட்
தாயை காத்த தனையன் 1962 மெகா ஹிட்
குடும்பத் தலைவன் 1962 வெற்றி படம்
தர்மம் கலை காக்கும்  1963 மெகா ஹிட்
நீதிக்குப் பின் பாசம்  1963 மெகா ஹிட்
வேட்டைக்காரன் 1964 சூப்பர் டூப்பர் ஹிட்
தொழிலாளி 1964 மெகா ஹிட்
கன்னித்தாய் 1965 சுமாரான வெற்றி
முகராசி  1966 100 நாட்கள் ஹிட்
தனிப்பிறவி 1966 மெகா ஹிட்
தாய்க்கு தலை மகன் 1967 மெகா ஹிட்
விவசாயி 1967 மெகா ஹிட்
தேர்த்திருவிழா 1968 சுமாரான வெற்றி
காதல் வாகனம் 1968 தோல்வி
நல்ல நேரம் 1972 ரெக்கார்ட் பிரேக் ஹிட்

 

தேவர் ஃப்லிம்ஸ்-எம்.ஜி.ஆர்., கூட்டணியில் காதல் வாகனம் தான் படுதோல்வியை சந்தித்த திரைப்படம். தேர்த்திருவிழா மற்றும் கன்னித்தாய் திரைப்படங்கள் ஓரளவு தப்பிய திரைப்படங்கள். அந்த வரிசையில், 57 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான கன்னித்தாய் திரைப்படம், பெரிய எதிர்பார்ப்பை கொண்டு வந்து, அதை நிறைவேற்ற முடியாமல் மெகா வெற்றியை பெறத் தவறிய திரைப்படம் தான். ஆனால், புரட்சி தலைவரும்-எதிர்கால புரட்சித் தலைவியும் ஒன்றிணைந்த முதல் படம் என்பதால், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ரசிகர்களுக்கு அவர்கள் இணைந்த இந்த நாள் கட்டாயம் முக்கியமான நாளே.