தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிகரமாகப் பயணித்து மக்கள் நாயகனாக உருவெடுத்தவர்களைப் பற்றி யோசித்தால் முதலில் நம் நினைவுக்கு வரும் பெயர் எம்.ஜி.ஆர். (M.G.Ramachandran) இன்றும் ‘எம்.ஜி.ஆருக்கு ஓட்டு போடுகிறேன்’ என்று இரட்டை இலைக்கு ஓட்டு போடுபவர்கள், சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்பதே அவர் மக்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இறங்கியிருக்கிறார் என்பதற்கு சான்று!
குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை
தமிழ் திரை உலகை பல ஆண்டுகளும், தமிழ்நாட்டை 10 ஆண்டுகளும் ஆட்சி செய்து, மக்களின் மனதில் என்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக உயர்ந்து, அதிமுக என்னும் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று.
சினிமாவில் தனிப்பெரும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த எம்ஜிஆர், உழைக்கும் மக்கள், பழங்குடி மக்கள், விவசாயிகள், மீனவர்கள், காவல்துறையினர் என அனைத்து பிரிவினருக்கும் மரியாதை செலுத்தும் விதத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக நடித்து அந்தந்த சமுதாய மக்களின் மனங்களை வென்றார். ரிக்ஷாகாரன், விவசாயி, படகோட்டி, காவல் காரன், மீனவ நண்பன் என அவரது படங்களின் லிஸ்ட் மக்கள் இதயங்களைக் குறிவைத்து நீண்டது.
வயதானவர்கள், பெண்கள் மீது எம்ஜிஆர் உயர்ந்த கருத்துகளை கொண்டிருந்தார். அதற்காக தாய்க்குலத்திடம் அவருக்கு வரவேற்பு அதிகரித்தது, அவரது வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம். குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்ட எம்ஜிஆரின் படங்களுக்கு என சிறுவர் ரசிகர் பட்டாளமும் இருந்தது. அவர்களுக்கான நல்ல கருத்துக்களையும், தன் படங்களில் அவர் சொல்லத் தவறியதில்லை.
'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'புத்தன் ஏசு காந்தி பிறந்தது', 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்', 'நல்லப் பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, 'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ என்று குழந்தைகளை தூக்கி பாடி அவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சேர்த்து அறிவுரை கூறி ஆழமாக மனதில் பதிந்தார் எம்ஜிஆர்.
அரசியலுக்கு அச்சாணி
“நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்” என்று தனது திரைப்படங்களில் பாடல்களின் மூலம் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தி பாட்டாளி மக்கள் இடையே ஆதரவைப் பெற்றார். எம்.ஜி.ஆர் இயல்பிலேயே கருணை குணம், துணிச்சல், சிந்தனைத் தெளிவு போன்றவற்றைக் கொண்டிருந்தார்.
அதுவே அவர் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது. அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிய எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியில் சென்ற அவர், அவருக்கான ஆதரவைக் காண்பிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி தனிப்பெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டை தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்து, தேர்தலில் தோல்வியற்றவராக மறைந்தார்.
முதலமைச்சர்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக 10 ஆண்டுகள் பதவி வகித்தார். ஏழை மக்கள் மீது அக்கறை கொண்டிருந்த எம்ஜிஆர், அவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தார். பால்ய வயதுகளில் பசியிலும் வறுமையிலும் வாடியது போல், மற்ற குழந்தைகளும் பசியோடிருக்கக் கூடாது என்பதற்காக பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார்.
தனது நலத்திட்டங்கள் மற்றும் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பு காரணமாக மக்களின் மனதில் நீங்காத தலைவராக இடம் பெற்றிருந்த எம்ஜிஆர், கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். அவரது உடலுக்கு மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே மரியாதை செலுத்தப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும் தமிழ் சினிமா உள்ள காலம் வரையிலும் என்றென்றும் எம்.ஜி.ஆர் நினைவுகூரப்படுவார்.