தமிழில் சன் டிவியில் வெளியான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமாவர் உமா மகேஸ்வரி. திருமுருகன் இயக்கி, நடித்த அந்த சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கால்நடை மருத்துவமரை திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் பார்க்க முடியவில்லை. அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் (அக்.2021) அவர் மரணமடைந்தார். ஓராண்டாகவே அவர் உடல் நலன் சரியில்லாமல் இறந்ததாகக் கூறப்படுகிறது. 40 வயதே நிரம்பிய அவரது மரணம் சீரியல் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி, மீனா, மாளவிகா உள்ளிட்டோர் நடித்த வெற்றிக்கொடிகட்டு படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் உமா மகேஸ்வரி. அல்லி அர்ஜுனா, உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஈ பார்கவி நிலையம் என்கிற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தவர் உமா. உமா மறைவு குறித்து அவரது சகோதரி 'மெட்டி ஒலி' சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்திருந்த வனஜா மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியிலிருந்து சில விஷயங்கள்..
”உமாவோடு மறைவை இன்று கூட எங்களால் நம்ப முடியவில்லை. ரெண்டு வருஷமாவே அவளுக்கு உடல்நிலை சரியில்லை. கொரோனா முதல் அலையின்போதே அவளுக்கு மஞ்சள் காமாலை வந்தது. அப்போ, அவ உடல் ரொம்ப மோசமாச்சி. கஷ்டப்பட்டு காப்பாத்தினோம். 2 மாசம் சிகிச்சையில் இருந்தா. அப்புறம் அவ வீட்டுக்காரோட ஊருக்குப் போனா. ஆனால் அங்கே அவள் கொஞ்சமும் டயட்டை பராமரிக்கவில்லை. மஞ்சள் காமாலை வந்த உடம்பு. ஆனா வாய் கட்டாம கண்டதையும் சாப்பிட்டா. அவ தன்னோட உடல்நிலையை கொஞ்சம் கூட அக்கறையா கவனிச்சிக்கவே இல்லை. அதன் விளைவுதான் இது.
நம்ம எல்லாருக்கு ஹெல்த் மேல அக்கறை இருக்கானு பார்த்தா கொஞ்ச பேருக்குத்தான் இருக்கும். உமாவும் அப்படித்தான் உடலை கவனிக்காம விட்டுட்டா.
உமாகிட்ட இருந்து ஒரு நாள் ஃபோன் வரலைன்னாலும் பயமாயிடும். அதே மாதிரி உமா நம்பரில் இருந்து அதிகாலை, இல்லை இரவு நேரத்தில் ஃபோன் வந்தாலும் பயமாயிடும். உமாவோட உடல்நிலைதான் அந்த பயத்துக்குக் காரணம். கடைசியா அவளுக்கு உடம்பு முடியலைன்னு ஃபோன் வந்ததும் நான் ஓடிப்போனேன். ஆனா, ஏன் போனேன்னு இன்றுவரை வருந்துறேன். உள்ள கொண்டு போனாங்க, அவளுக்கு ஃபிட்ஸ் வந்த மாதிரி இருந்தது. கடைசியா நாங்க பார்த்துக்கிட்டு இருக்கும்போதே உயிர் போயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. எத்தனை காலம் ஆனாலும் அதை மட்டும் மறக்கவே முடியாது.
உமாவோடு நிறைவேறாத ஆசைன்னு சொன்னா குழந்தை. அவ குழந்தை பெற்றுக்கொள்ள நினைச்சா.. ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கோம்னு சொல்லுவா.
ஆனா அதைக்கூட அவ கவலையா எல்லாம் நினைச்சதில்லை. உமா எப்பவும் வீட்டுக்காரரை விட்டே கொடுக்க மாட்டா. அவரும் அப்படித்தான். இருவருமே அன்பாக இருந்தார்கள். அவர்களுக்குள் பிரச்சினை என்பதெல்லாம் சும்மா கட்டுக்கதை. அவர் தொழில் நிமித்தமா ஈரோட்டில் இருந்தார். அவ்வப்போது சென்னை வருவார். இதை வைத்துக் கொண்டு கதை கட்டியிருப்பார்கள்.
நான், அப்பா, அம்மா, உமா இதுதான் எங்கள் லைஃப். எங்களுக்குப் பிறகுதான் எல்லோரும் என நினைப்போம். என் பையனுக்கு உமா சித்தின்னா அவ்ளோ இஷ்டம்.
ஒருவேளை உமா திரும்பி வந்தா அதைவிட சந்தோஷம் எதுவுமே இருக்க முடியாது. அது நடக்காதுன்னு தெரியும். இருந்தாலும் அப்படி ஒரு ஆசை இருக்கு. இன்னிக்கு அம்மாவோ, நானோ உமா இறந்துட்டான்னு நினைப்பதே இல்லை. அவ எங்கேயோ தூரத்துல இருக்க ஃபோன் எடுக்கமுடியலைன்னுதான் நினைச்சிக்கிட்டோ இருக்கோம். இல்லைன்னா வாழவே முடியாது" என்று கூறியுள்ளார் மெட்டி ஒலி லீலா.