தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான அரசியல் சார்ந்த திரைப்படம் இருவர். இது வரையில் இந்திய திரையுலகம் இதுவரை காணாத ஒரு சிறந்த திரைப்படமாக இன்றும் இது கருதப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், எம்.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகிய மூவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயம் அனைத்து திரை ரசிகர்களும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு படம். 


 



இருவர் படத்திற்காக ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்ட மம்மூட்டி


 


இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், தபு, ரேவதி, நாசர், டெல்லி கணேஷ், கௌதமி, நிழல்கள் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். 


பிரகாஷ்ராஜ் ரோலில் நடிக்க இருந்தது இவரா ?


மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் எம்.ஜி.ஆராக ஆனந்தன் கதாபாத்திரத்திலும், நடிகர் பிரகாஷ் ராஜ், எம். கருணாநிதியாக   தமிழ்செல்வன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். முதலில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிஷன் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் செய்தவர் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. 


விலகியது ஏன்?


இயக்குனர் மணிரத்னம் மலையாள திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன் லால் இருவரையும் 'இருவர்' படத்தில் ஒருங்கிணைக்க ஆர்வமாக இருந்தார். படத்தின் வசனங்கள் தூய தமிழில் இருந்ததால் மம்மூட்டி அதை பேசுவதில் சற்று சிரமமப்பட்டுள்ளார். அதனால் அந்த அறிய வாய்ப்பில் இருந்து பின்வாங்கியுள்ளார். தமிழில் அவர் சரளமாக பேசக்கூடியவர் என்றாலும் பழம்பெரும் கவிஞர்களால் எழுதப்பட்ட வசனங்களுக்கு அவரால் நியாயம் செய்ய இயலவில்லை என கருதியதால் இருவர் படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் நல்ல ஆளுமை கொண்ட ஒரு நடிகரை தேர்வு செய்யுமாறு இயக்குனர் மணிரத்னத்திடம் பரிந்துரை செய்துள்ளார். அப்படி தான் அந்த வாய்ப்பு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கிடைத்தது. அவரின் சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.