மாரடைப்பால் உயிரிழந்த மயில்சாமிக்கு நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.


தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமிக்கு இன்று (பிப்.19) அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.


தன் 57ஆவது வயதில் மயில்சாமிக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.


திரைப்பயணம்


ஈரோடு, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மயில்சாமி, பாக்யராஜின் தாவணிக் கனவுகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 80கள் மத்தியில் தொடங்கி நடித்து வரும் மயில்சாமி, தில், 12பி, தூள் உள்ளிட்ட படங்களில் விவேக் உடன் இணைந்து செய்த காமெடி ரோல்களில் பெரும் கவனமீர்த்தார்.


இந்நிலையில் மயில்சாமியின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறது.


கமல்ஹாசன் இரங்கல்


அந்த வகையில் முன்னதாக நடிகர் கமல்ஹாசன் ”நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கு என் அஞ்சலி எனப் பதிவிட்டு அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


மயில்சாமி தன் திரையுலக வாழ்வின் தொடக்க காலத்தில் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா முதல் ஆளவந்தான்  உள்ளிட்ட படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.


தனுஷ் பதிவு


இதேபோல் மயில்சாமியின் மறைவு குறித்து பதிவிட்டுள்ள தனுஷ், “மிகப்பெரும் திறமைசாலி, என் நெஞ்சம் பதறுகிறது” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


நடிகர் மயில்சாமி, தேவதையைக் கண்டேன், உத்தமபுத்திரன், திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் இணைந்து தனுஷுடன் நடித்துள்ளார்.


வைகைச் செல்வன் ட்வீட்


இதேபோல்  அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ நடிகர் மயில்சாமி மறைந்து விட்டார். நீங்கள் சாப்பிடுவது சைவ சாப்பாடா, அசைவ சாப்பாடா என்று கேட்டால், எம்.ஜி.ஆர் சாப்பாடு என்பார்! நல்ல மனிதர், நயத்தகு பண்பாளர் என்று நினைவு கூறுகிறேன்..!” எனப் பதிவிட்டுள்ளார்.


திரைத் துறையினர் தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தொடர்ந்து மயில்சாமி குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


142 படங்கள்


தீவிர சிவபக்தரான நடிகர் மயில்சாமி நேற்று இரவு (பிப்.18) சிவராத்திரி விழாவில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து பங்கேற்ற நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரைத்துறையினர் அவரது ரசிகர்கள் எனப் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மயில்சாமி, கொரோனா காலத்தில் விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கயுள்ளார்.


இதுவரை 142க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மயில்சாமி, இறுதியாக உதயநிதியுடன் நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷங்க படங்களின் மூலம் கவனமீர்த்தது குறிப்பிடத்தக்கது.