தமிழ் சினிமா அன்று முதல் இன்று வரை பாசமிகுந்த கதைக்களங்களை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் அம்மா - மகன், தந்தை - மகன், அண்ணன் - தம்பி, அண்ணன் - தங்கை, கணவன் - மனைவி போன்ற குடும்ப உறவுகளை போற்றும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை கொண்டாடி வருகிறது. கருப்பு வெள்ளை காலம் முதல் முப்பரிமாண காலம் வரையில் அதுபோன்று தமிழில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
மாயாண்டி குடும்பத்தார்:
அந்த வகையில், கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மாயாண்டி குடும்பத்தார். தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளை போற்றி தொடர் வெற்றிப் படங்களை இயக்கிய ராசுமதுரவன் இயக்கிய திரைப்படம் இந்த படம்.
10 இயக்குனர்கள் நடித்த படம்:
இந்த படத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் தமிழில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் 10 இயக்குனர்கள் நடித்திருப்பார்கள். கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், கேபி ஜெகன்னாத், தருண் கோபி, ஜிஎம் குமார், ரவி மரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி, ராஜ்கபூர் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான்:
மேலே குறிப்பிட்ட அனைவருமே திரைப்பட இயக்குனர்கள் ஆவார்கள். மணிவண்ணன் தமிழ் சினிமாவே கொண்டாடிய இயக்குனர் மற்றும் நடிகர். இவர் விஜயகாந்த், மோகன், சிவகுமார், சத்யராஜ், முரளி, பிரசாந்த் என பலரையும் இயக்கியுள்ளார். நடிகர் பொன்வண்ணன் அன்னை வயல், நதி கரையினிலே, கோமதி நாயகம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீர நடை, வாழ்த்துகள், தம்பி ஆகிய படங்களை சீமான் இயக்கியுள்ளார்.
விஜய், அஜித் பட இயக்குனர்கள்:
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களை கேபி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். விஷாலின் திமிரு படத்தை இயக்கியவர் இந்த படத்தின் நாயகன் தருண் கோபி. ஜிஎன் குமார் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பாக்கெட், உருவம் ஆகிய படத்தை இயக்கியவர். ஆசை ஆசையாய், மிளகா என்ற படத்தை ரவி மரியா இயக்கியுள்ளார்.
நந்தா பெரியசாமி ஆர்யாவின் ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி, வண்ண ஜிகினா, ஆனந்தம் விளையாடும் வீடு, திரு மாணிக்கம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக உலா வரும் சிங்கம்புலி அஜித்தின் ரெட், சூர்யாவின் மாயாவி படத்தை இயக்கியுள்ளார். நடிகர் ராஜ்கபூர் இயக்குனர் மணிவண்ணன் போலவே மிகவும் பிரபலமான இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் சத்யராஜ், சரத்குமார், அஜித் உள்பட பலரை இயக்கியுள்ளார்.
குடும்பங்கள் கொண்டாடிய வெற்றி:
தமிழ் சினிமாவின் 10 இயக்குனர்களை நடிக்க வைத்தது மட்டுமின்றி அந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக கொடுத்தவர் இயக்குனர் ராசு மதுரவன். அண்ணன், தம்பி பாசம், தந்தை - மகன் பாசம், காதல் என முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த படம் வெளியாகியது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் திரைப்படங்களில் மாயாண்டி குடும்பத்திாருக்கு எப்போதும் தனி இடம் உண்டு.