வாழை
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
வாழை டிரைலர்
வாழை திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது . இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்த டிரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாதிய ஏற்றத்தாழ்வுகள் தனக்குள் சிறு வயதில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளால் தான் கஷ்டப்பட்டதாக மாரி செல்வராஜ் பலமுறை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இளமைப் பருவத்தின் நிகழ்வுகளை மறு உருவாக்கம் செய்யும் விதமாக இப்படத்தை இயக்கியுள்ளார் மாரி. அவரது முந்தைய படங்களில் வருவதுபோல் நாட்டார் தெய்வங்கள், விலங்குகள் இந்த படத்தின் கதையுலகிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்த டிரைலரின் மூலம் எதிர்பார்க்கலாம்