உதவி இயக்குநராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மாரி செல்வராஜ் அதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படத்தை இயக்கி இருந்தார். சிறு வயதில் அவர் சந்தித்த சாதி மத பாகுபாடுகளை மையமாக வைத்து அவர் இயக்கிய 'வாழை' படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' விவாத நிழச்சியில் படித்துக்கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் அவர் சந்தித்த பல துயரங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.





தற்போது பேசிய வீடியோ வைரலாகி வரும் அதே வேளையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்னே இதே 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ ஒன்றும் ட்ரெண்டிங்காகி வருகிறது. ஒரு இயக்குநராக மாரி செல்வராஜுக்கு மக்கள் மத்தியில் அடையாளம் கிடைப்பதற்கு முன்னரே அவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அந்த சமயத்தில் அவர் 'நீ நானா' நிகழ்ச்சியில் "இளம் தலைமுறையினர் ரசிக்கும் நடனங்கள் எது" என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசுகையில் "சாவுக்கு முன்னாடி ஆடுற டான்ஸுக்கு யாருக்குமே பதில் சொல்ல தேவையில்லை, அச்சப்பட தேவையில்லை. எனக்கு எங்க தோணுதோ நான் அங்க ஆடுவேன். நிறையே பையனுங்க அப்பா இறந்ததுக்கு கூட மாலை போட்டுக்கிட்டு ஆடி இருக்காங்க. இதை எல்லாரும் சாவு டான்ஸ்னு சொல்றாங்க. இதை சென்னையில உள்ள பிரபலமான இடத்துல எங்கேயாவது ஆடுனா ரசிக்க மாட்டாங்க. பால்கனியில் நின்னு ரசிக்குற டான்ஸ் தான் இது. பரதம் இல்லாட்டி வேற ஏதாவது டான்ஸ் ஆடுறவங்களை மேடை ஏறி போய் பாராட்டுவாங்க. ஆனா இந்த டான்ஸ் ஆடுபவர்களை யாரும் ரசிப்பதில்லை.  தன்னுடைய சந்தோஷத்தை நிரூபிக்குற ஒரு நடனம் இது. யாருக்கும் நிரூபிக்க தேவையில்லாத ஒரு டான்ஸ்" என பேசி இருந்தார் மாரி செல்வராஜ்.








அதை விட ஹைலைட்டாக தார தப்பட்டை மியூசிக் ஒலிக்க மாரி செல்வராஜ் தன்னுடைய மனம் போல சந்தோஷமாக ஆடி இருந்தார். உடன் சாண்டி மாஸ்டரும் நடனம் ஆடி இருந்தார். மாரி செல்வராஜ் ஆடிய இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.