Mareesan Teaser: தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் வடிவேலு. மாமன்னன் படத்திற்கு பிறகு அவருக்கு ஏராளமான குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மாமன்னன் படத்தில் இவரது நடிப்பும், வில்லனாக நடித்த பகத் ஃபாசில் நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

வடிவேலு - பகத் ஃபாசில்:

இதையடுத்து, வடிவேலுவும் பகத் ஃபாசிலும் இணைந்து நடிக்க வைக்க பலரும் முயற்சி எடுத்தனர். இதையடுத்து, சுதீஷ் சங்கர் இயக்கத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது உறுதியானது. கடந்தாண்டு இந்த படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. 

மாரீசன் டீசர் ரிலீஸ்:

இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் டீசரில் பகத் பாசிலும், வடிவேலும் சாமானியர்களாகவே காட்டப்பட்டுள்ளனர். நெல்லைப் பகுதியில் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆஹா இன்ப நிலவினிலே என்ற பாடலே இந்த டீசர் முழுவதும் வருகிறது. படம் நகைச்சுவையாகவும், ஆக்ஷன் திரைக்கதை களத்திலும் அமைக்கப்பட்டிருப்பதையும், கொலை விசாரணை ஒன்றும் படத்தில் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. 

நட்சத்திர பட்டாளங்கள்:

இந்த படத்தில் கோவை சரளா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், சரவணன் சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். 

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

பகத் ஃபாசில் தமிழில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவருக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தில் இருவரும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.