பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள திரைப்படம்  ‘சரக்கு’. இப்படம் முன்னதாக தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், படத்தைப் பார்த்து ஏராளமான காட்சிகள், வசனங்களை நீக்க சொல்லியுள்ளது தணிக்கை வாரியம். இந்நிலையில், தணிக்கை வாரியத்தால் டென்சனான நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


அம்பானி, அதானிக்கு கட்


“சரக்கு படம் பார்த்துவிட்டு நீண்ட லிஸ்ட் கொடுத்தார்கள். இதெல்லாம் கட்  பண்ண வேண்டும் என்று. நான் இதையெல்லாம் எடுத்தா படமே இருக்காதுங்க என சொன்னேன். உதாரணத்துக்கு இதுல அம்பானி, அதானி இந்த பெயர்கள்லாம் வருது. இருக்கக்கூடாது என்றார்கள். நான் ஏன் இருக்கக்கூடாது  எனக் கேட்டேன். அவங்க தனிப்பட்ட நபர்கள் என்கிறார்கள்.


அவர்கள் வேணும்னா என் மேல கேஸ் போடட்டும். உலகத்துல இருக்க எல்லாருக்குமே இது தெரியும். பல லட்சம் கோடி நம் வரிப்பணத்த அவர்களுக்கு டிஸ்கவுண்ட் செய்யறாங்க, ஏழைகளுக்கு தரதில்லை.. சுதந்திர நாட்டுல 300, 400 வருஷமா இருக்க பொத்துறையான ரயில்வே, கப்பல் துறைமுகம், ஏர்போர்ட் எல்லாத்தையும் இப்படிபண்றாங்க. 


‘வெற்றிமாறன கற்பனைக் கதைனு எழுத வச்சாங்க’


இது ஒரு உணர்வு, கருத்து சுதந்திரம். வாச்சத்தி கொடுமைகளை படம் எடுத்தார்கள். நண்பர் வெற்றிமாறன் எடுத்தார். ஆனால் இது ஒரு கற்பனைக் கதை என்று போட வைத்தார்கள். அந்த மாதிரி நாங்க போடறோம்னு சொன்னேன், இல்லை இல்லை என ஏகப்பட்ட தடைகளை விதிக்கிறார்கள். திருநங்கைகளை மேம்படுத்தும் வகையில் ஒரு பாடல், அதில் கொச்சையாக எதுவுமில்லை.  ஆனால் இட்டுக்கட்டி ஏகப்பட்ட காட்சி அதில் இருக்கிறது என்கிறார்கள்.


‘ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை’


காவாலா பாடல எப்படி அனுமதிச்சாங்க? பாடல் வரிகளே “வா வா ராத்திரிக்கு ரா ரா”னு இருக்கு. மூவ்ண்ட்ஸ் மோசமா இருக்கு. அதை மட்டும் காண்பித்தார்களா இல்லையா?  பெரிய படத்துக்கு ஒரு அளவுகோல். அந்த ஒரு பாட்ட வச்சு தான் படமே ஓடுச்சு. மத்தபடி அந்தப் படத்துல ஒரு வெங்காயமும் இல்ல. என்னால இத பண்ண முடியாதா.. தமன்னா இடத்துல ஒரு கமன்னாவ வச்சு 10 லட்சம்  கொடுத்து ஆட வைக்க முடியாதா? ஆனால் இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பெரிய ஆள் வயசாகி நடிச்சா அனுமதிப்பார்கள். இது என்ன அளவுகோல். நானும் கவர்ச்சியா எடுக்கவா?” எனப் பேசியுள்ளார்.


ரஜினியின் சர்ச்சைப் பேச்சு


ஜெயிலர் படம் பற்றிய மன்சூர் அலிகானின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்பட விழாவில் படம் சுமாராக இருந்தது எனப் பேசியது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளானது. “ரீ ரெக்கார்டிங்குக்கு முன்பு ஜெயிலர் சுமாராக தான் இருந்தது. ஆனால் அனிருத் இசை தான் படத்தை தூக்கி நிறுத்தியது. நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என தனது பின்னணி இசை மூலம் படத்தை அனிருத் நிற்க வைத்துள்ளார்” எனப் பேசினார்.


நடிகர் ரஜினிகாந்தின் இந்தக் கருத்து அப்போது சர்ச்சையைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் மன்சூர் அலி கானும் அதே போன்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.