பாரதி ராஜாவின் மகன், மனோஜ் பாரதி ராஜா (48) இன்று மாலை 6 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரை பற்றிய பல தகவல்கள் அடுத்தது வெளியாகி வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இவர் டூப்பாக நடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை மனோஜ் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உள்ளவர் பாரதி ராஜா. இவருடைய மகனுக்கு ஆரம்பத்தில் படம் இயக்குவதில் ஆர்வம் இருந்தாலும், பின்னர்... புளோரிடாவில் தியேட்டர் ஆர்டிஸ்டுக்கான உரிய பயிற்சி பெற்று தன்னுடைய தந்தை இயக்கத்திலேயே ஹீரோவாக அறிமுகமானார். இவர் ஹீரோவாக நடித்த, 'தாஜ்மஹால்' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெருத்தது.

இந்த படத்தை தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய மனோஜ், சமுத்திரம் படத்தில் சரத்குமார், முரளி, போன்ற நடிகர்களுடன் நடித்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இதன் பின்னர் கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் இவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தாலும், இந்த படத்திற்கு பின்னர் வெளியான 'பல்லவன், ஈர நிலம், மஹா நடிகன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை கொடுத்தது.
இதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தன்னுடைய தந்தை இயக்கத்தில் வெளியான, 'அன்னக்கொடி' படத்தில் மிகவும் போல்டான வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்ததால், இவரின் கதாபாத்திரம் பேசப்படாமல் போனது. கடைசியாக 'விருமன்' படத்தில் நடித்திருந்தார். அதே போல் சமீபத்தில் வெளியான ஸ்நேக் லேடர் என்கிற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
அதுமட்டும் அல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே, மனோஜ் டூப் போட்டுள்ளார் என்பது தெரியுமா? இயக்குன ஷங்கர் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில், ரஜினி வசீகரன் - சிட்டி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதில் சிட்டியாக நடித்த ரோபோவுக்கு டூப் போட்டது மனோஜ் தான். இந்த தகவலை சுமார் 10 வருடங்கள் கழித்து, 2020-ஆம் ஆண்டு, அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.