மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல்  பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற குணா குகையைப் பற்றி காணலாம். 


கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான படம் “மஞ்சுமெல் பாய்ஸ்”. சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான இப்படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சம்பவம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியான நாள் முதல் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 


திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனில் குணா படம் வெளிவந்த பிறகு தான் இந்த இடம் குணா குகை என்றழைக்கப்பட்டது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இந்த படம் பற்றியும், இதில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன்” பாடலும் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டு படம் பார்ப்பவர்களையும் புல்லரிக்க வைத்துள்ளது. 


ஆனால் இந்த குணா குகையை கண்டுபிடிக்க கமல்ஹாசன் பட்ட சிரமம் கொஞ்சம் நஞ்சமல்ல. குணா படம் வெளியாவதற்கு முன்னால் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், ‘நான் ரொம்ப நாளைக்கு பிறகு வித்தியாசமாக ஒரு காதல் கதை பண்ணியிருக்கிறேன். இந்த படத்துக்காக நானும் சந்தான பாரதியும் கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பே நடைபெறாத மக்கள் நடமாட்டமில்லாத இடங்களில் படமாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தேடினோம். 






கிட்டதட்ட இருவரும் 7 கிலோ மீட்டர் வரை சென்று படப்பிடிப்பு நடத்த ஏதுவான இடங்களை தேடினோம். எதுவும் கிடைக்கவே இல்லை. திரும்பி போகலாம் என முடிவு செய்த நிலையில் இன்னும் ஒரு கி.மீ., போய் பார்க்கலாம் என நினைத்து சென்றபோது தான் ஆச்சரியம் காத்திருந்தது. எட்டாவது கிலோ மீட்டரில் நாங்கள் தேடியபடி இடங்கள் இருந்தது. அந்த இடத்தில் தான் சர்ச் செட் போட்டோம். அதேபோல் ஷூட்டிங் நடத்த அந்த இடத்துக்கு செல்ல பாதை அமைத்தோம். இதேபோல் படக்குழுவினர் அனைவரும் 700 அடி பள்ளத்தாக்கிற்கு கயிறில் தொங்கியபடி சென்றோம் என தெரிவித்திருப்பார். 


மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூலம் கமலின் குணா படம் பற்றி அறிந்த ரசிகர்கள் பலரும் அப்படத்தை ஓடிடி தளங்களில் பார்த்து வருகின்றனர். மேலும் டெக்னாலஜி எதுவுமே இல்லாத அந்த காலத்திலேயே கமல் அப்படி ஒரு அசாத்திய சாதனையை குணா படத்தில் பண்ணியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.