பொங்கலுக்கு மிகவும் கெத்தாக துணிந்து இறங்கும் 'துணிவு' திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன், சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர், ஜி.எம். சுந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை தெறிக்கவிட்டது. இதற்கு தான் இத்தனை நாட்களாக காத்து கொண்டு இருந்தோம் என அவர்கள் துணிவு படத்தின் டிரைலரை கொண்டாடி தீர்த்து விட்டார்கள். 


 



கண்மணியையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் :


துணிவு திரைப்படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து ஒரு நேர்காணலின் போது மனம் திறந்து பேசியிருந்தார் நடிகை மஞ்சு வாரியர். இதுவரையில் அவர் நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். "முதல் முறையாக ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்கிறேன் அதிலும் நான் ஆக்ஷன் சீக்வென்ஸ் காட்சிகளில் ஒரு பங்கு வகிக்கிறேன் என்பது எல்லாம் எனக்கு மிகவும் புதுமையான விஷயம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு மாஸ் திரைப்படத்தில் நடிப்பது என்பது இது தான் முதல் முறை. இப்படத்தின் ரிலீஸ்க்காக நான் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன். அசுரன் திரைப்படத்தில் என்னை பச்சையம்மாளாக எப்படி தமிழ் ரசிகர்கள் ஏற்று கொண்டார்களோ அதே போல கண்மணி கதாபாத்திரத்தையும் அவர்கள் வரவேற்க வேண்டும் என தமிழ் ரசிகர்களிடம் கேட்டு கொள்கிறேன்" என்றார் மஞ்சு வாரியர்.


 






 


துப்பாக்கி பிடித்த கதை :


மேலும் துணிவு திரைப்படத்தில் துப்பாக்கி பயன்படுத்திய அனுபவம் பற்றி மஞ்சு வாரியர் கூறுகையில் " ஒவ்வொரு நாளும் புது புது அனுபவம் தான். ஏதாவது ஒன்றை தினசரி நான் புதிதாக கற்றுக்கொண்டேன். எனக்கு படப்பிடிப்பு நேரங்கள் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. இன்னிக்கு இதுவா நாளைக்கு இதுவா என மிகவும் எக்சைட்டிங்காக இருக்கும். அப்படி கிடைத்த அனுபவம் தான் துப்பாக்கியை பயன்படுத்துவது. எனக்கு துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும் என்பது கூட தெரியாது. சினிமாவை பார்த்து நாம் தெரிந்து கொண்டு இருந்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும், உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி எல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. கொஞ்சமும் வெட்கம் பார்க்காமல் நான் நேரடியாக அஜித் சாரிடம் சென்று கேட்டுவிட்டேன். ஆக்ஷன் படங்கள், ஸ்டைலான ஆக்ஷன் காட்சிகள் இவை அனைத்திற்கும்  மிகவும் பிரபலமானவர் அஜித் சார். அவர் தான் இதற்கு சரியான தேர்வு என அவரிடம் சென்று துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என கேட்டேன். அவரும் சற்றும் தயக்கம் இல்லாமல் மிகவும் பொறுமையுடன் எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும், உடலை  எப்படி கம்பீரமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தார். துணிவு திரைப்படத்தில் நான் ஒரு தேர்ந்த துப்பாக்கி சுடும் கதாபாத்திரமாக நடித்துள்ளேன். அதனால் அதற்கு ஏற்ற கம்பீரம் முக்கியம். அந்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சந்தோஷமாக அந்த காட்சிகளில் நடித்தேன்" என்றார் மஞ்சு வாரியர். 


 






கதாபாத்திரத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?


படங்களை நேர்த்தியாக மஞ்சு வாரியர் தேர்வு செய்வது பற்றி கேட்டதற்கு "எனக்கு அமையும் படங்கள் குறித்து சொல்ல வேண்டும் என்றால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றே சொல்ல வேண்டும். எங்கு வரும் வாய்ப்புகளில் இருந்து சிறந்தது தேர்ந்தெடுக்கும் வேலை மட்டும் தான் என்னுடையது. எனக்காக நிறைய பேர் நல்ல ரோல், கதை என எனக்காக யோசிக்கிறார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றாக வரும் என எதிர்பார்க்கும் படங்கள் சில சமயங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறாது. எல்லா நேரங்களில் எல்லா படங்களும் வெற்றி பெறாது. எனக்கு எந்த திரைப்படங்கள் எக்சைட்டிங்காக நான் நினைக்கிறேனோ அதை தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அனைவரையும் போல நான் வித்தியாசமான ரோல்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்" என்றார்.  


என்ஜாய் பண்ணி பாருங்க :


துணிவு திரைப்படம் இப்படி, அப்படி, இது இருக்கும் அது இருக்கும் என்ற எந்த ஒரு  எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கம் சென்று முழுமையாக என்ஜாய் செய்யுங்கள். நாங்கள் அனைவரும் படத்திற்காக எங்களுடைய முழு உழைப்பையும் உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுத்துள்ளோம். நீங்களும் அதை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை ரசியுங்கள் என்றார் மஞ்சு வாரியர்.