தென்னிந்திய சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் 90களில் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதற்கு பிறகு 2016ம் ஆண்டு நடிகர் சிம்பு ஜோடியாக 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மஞ்சிமா மோகன் தொடர்ந்து தேவராட்டம், முடிசூடா மன்னன் போன்ற படங்களில் நடித்திருந்தார். 


 



 


சினிமாவில் இருந்து பிரேக் :


ஒரு விபத்து காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டதால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். பிரேக் எடுத்த சமயத்தில் உடல் எடை கூடியதால் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அதை பற்றி கவலை கொள்ளாமல் இயல்பாக இருந்து வந்தார் மஞ்சிமா.  நடிகர் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதல் செய்து  வந்ததை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 


 


இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவின. கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றதை பலரும் பாராட்டினாலும் ஒரு சில விமர்சகர்கள் மஞ்சிமாவின் உடல் எடையை மிகவும் மோசமாக கிண்டல் செய்தனர். இப்படி எதை தொடர்பாக அனைவரும் அவரிடம் பேசுவது குறித்து அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய எடை எனக்கு பிரச்சனை இல்லை. தேவைப்பட்டால் அதை என்னால் குறைக்க முடியும் என தெரிவித்து இருந்தார்.


 



ட்ரோல் செய்பர்களுக்கு தகுந்த பதிலடி:


தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன். மிகவும் பிஸியாக இருக்கும் மஞ்சிமாவை இன்ஸ்டாகிராமில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து  வருகிறார்கள். அந்த வகையில் மஞ்சிமா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் உங்களை ட்ரோல் செய்பவர்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்றதற்கு மிகவும் அழகாக பதிலடி கொடுத்துள்ளார். "இந்த ட்ரோல்களை எல்லாம் நான் பெரிதாக எடுத்து கொள்வது கிடையாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு சில ட்ரோல்கள் உண்மையிலேயே மிகவும் காமெடியாக இருக்கும். அதை பார்த்து சிரித்துவிட்டு எனது வேலையில் பார்க்க துவங்கிவிடுவேன்... அவ்வளவு தான்" என பளிச் என பதிலளித்து இருந்தார்.   


மஞ்சிமாவின் இந்த நேர்மையான பதில் அவரின் ஃபாலோவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பலரும் அவரின் இந்த ஸ்டோரிக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.