பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவின் 52 ஆவது பிறந்தநாள் இன்று.
இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான Pheri Bhetaula என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதன் பிறகு அடுத்தடுத்த பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் இந்தியன் , முதல்வன், பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில், ஹீரோவுக்கு மாமியாராக நடித்து அசத்தியிருந்தார்.
2012-ஆம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா ஒருவருட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டார். தற்போது புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். புற்றுநோயால் நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்ட அவர் தொடர்ந்து பாசிட்டிவான விஷயங்களை சமூகவலைதளங்கள் மூலமாக பரப்பி வருகிறார்.
புற்றுநோய் தனது வாழ்வை எப்படி மாற்றியது என்பது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்ததாவது:
நான் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எல்லாவற்றையும் இழந்து நின்றேன். அதுதான் என்னுடைய வாழ்கையை கொண்டாடவைத்தது. என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் எனக்கு ஆசீர்வாதமான நாள்தான். முன்னதாக, நான் பார்க்க மறந்த விஷயங்களை இப்போது பார்க்கிறேன். இப்போது நான் உயிரோடு இருப்பதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.” என்று பேசியிருந்தார்.
தனது சுயசரிதை நூலான ‘Healed' புத்தகத்திலும் இது பற்றி குறிப்பிட்டு இருந்த அவர், “ கேன்சர் எனது வாழ்கைக்கு தைரியத்தை அளித்திருக்கிறது. மோசமான வாழ்கை முறையால் மிக எளிதாக நான் நோய்வாய்பட்டேன். பல இருண்ட நாள்களை நான் கடந்து வந்திருக்கிறேன். கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்ததை நினைத்து பார்க்கும் போது , எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கேன்சரை நான் எனக்கு கொடுக்கப்பட்ட பரிசாகவே கருதுகிறேன். எனது சிந்தனை கூர்மையானது. என் மனம் தெளிவானது. முன்பு பதற்றமாக இருந்த நான் தற்போது அமைதியாக வாழ்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். மனிஷா கொய்ராலா நடிப்பில் இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரித்த 99 சாங்ஸ் படத்தில் நடித்திருந்தார்.