மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே படத்தின் ப்ரோமோவுக்காக குழுவினர் மெட்ரோ நகரங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதில் மணிரத்னனும் பங்கேற்று மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வரிசையில் “சூட்டிங் சமயத்தில் உங்கள் அன்றாட ரொட்டின் எப்படி இருக்கும்?” என மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்..
”என்னுடைய சூட்டிங் ஸ்பாட்டில் காலநேரமே கிடையாது. அவங்களுக்கு சாப்பாடே போடமாட்டேன். சாப்பாடு டைம் கொடுத்தாதானே போய் ஆர அமர இருந்துட்டு வருவாங்க. அதனால் அவர்களுக்கு இடைவேளையே கொடுக்குறது இல்லை.” என்றார்.
அருகில் இருந்த நடிகர் கார்த்தியிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில்,”அவருடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே இப்படித்தான். மணிசாரிடம் வொர்க் செய்யப் போறியா காலையிலயே சாப்பிட்டுட்டு கிளம்பிடு. உழைப்பு முக்கியமா சாப்பாடா என்பது நமது தேர்வுதான் இல்லையா?” என்றார் சிரித்தபடியே.
பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் ரிசர்வேஷன், சனிக்கிழமை இரவில் துவங்கிய நிலையில், இதுவரை 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இதனால், 4.50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. இதுவரை 225 சினிமா அரங்குகளில் மட்டுமே, பொன்னியின் செல்வன் 1 படத்திற்கான டிக்கெட் ரிசர்வேஷன் துவங்கியுள்ளது. மீதம் உள்ள பெரிய அரங்குகளில், இன்றும் நாளையும் டிக்கெட் புக்கிங் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் இப்படத்திற்கான டிக்கெட் பதிவீடு மும்முராக நடைபெற்று வருகிறது.
பீவிஆர், ஐநாக்ஸ் போன்ற பெரிய தியேட்டர்களில் முன்பதிவு துவங்கினால், சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் கூடுதல் வசூல் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பாக, விக்ரம் பீஸ்ட் மற்றும் வலிமை போன்ற படங்கள் முன்பதிவிலேயே நல்ல வசூலை பெற்றது. இந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் படமும் இணைந்துள்ளது.