குட் நைட் படத்தைத் தொடர்ந்து  நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது


மணிகண்டன்


எதார்த்தமான நடிப்பு, புதுமையான கதைகள் என ரசிகர்களை கவர்ந்து வருபவர்  நடிகர் மணிகண்டன். சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தப் பின் இந்தியா பாகிஸ்தான் , காதலும் கடந்துபோகும், விக்ரம் வேதா எட்டுத் தொட்டாக்கள் உள்ளிட்டப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார் . இதனை அடுத்து சில்லுக் கருப்பட்டி, ரஜினிகாந்தின் காலா உள்ளிட்டப் படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. த.செ ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படத்தில் ராஜா கண்ணுவாக நடித்த மணிகண்டனின் நடிப்பு ஒட்டுமொத்த படத்திற்கும் மிகப்பெரிய பலமாக அமைந்தது. நடிப்பு தவிர்த்து மிமிக்ரி, திரைக்கதைகளையும் எழுதி வருகிறார். இவர் எழுதி இயக்கிய படமான  நரை எழுதும் சரிதம் படம் குறிப்பிடத் தக்கது.


லவ்வர்


குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி,  ஹரிஷ் குமார்,  கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர்,  அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.



 


ட்ரெய்லர் எப்படி


பெரிய ஆடம்பரம் எதுவும் இல்லாமல் ஒரு எளிய காதல் கதை அதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகளை மையமாக உருவாகியிருக்கிப்பதாக தெரிகிறது லவ்வர் படம். ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கோபக்காரன் இளைஞனாக மணிகண்டனும் அவரைவிட பொருளாதாரத்தில் உயர்ந்தவராக அவரது காதலியாக கெளரி பிரியா ரெட்டியும் நடித்துள்ளார்கள். ஆறு வருடங்களாக காதலித்து வரும் இருவருக்கு இடையில் சந்தர்ப்ப சூழநிலைகளால் ஏற்படும் சிக்கல்கள்  இந்த ட்ரெய்லரில் காட்டப்படுகின்றன. குட் நைட் படத்தில் ஹோம்லியாக நடித்த மணிகண்டன் இந்தப் படத்தில் கெட்ட வார்த்தை பேசும் கோபக்கார இளைஞனாக நடித்துள்ளார். ஷான் ரோல்டனின் இசையில் இதுவரை ஏழு பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து வெளியாகியுள்ள நிலையில் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசை அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.