நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களும் கருத்துகளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

மக்கள் காவலன்

மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. மணிகண்டன் இதுவரை நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு, காவல்துறை பின்னணியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

வாகை சந்திரசேகர், சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஏ.வெங்கடேஷ், சண்முகம் முத்துசாமி, ஜென்சன் திவாகர், லல்லு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Continues below advertisement

தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனை என்ன?

படத்தைத் தணிக்கை செய்வதற்காகத் தயாரிப்புத் தரப்பு வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. அப்போது படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் மற்றும் கருத்துகளுக்கு தணிக்கை அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் சில காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகத் தெரிவித்து, படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர். மேலும், படக்குழுவினர் மறுதணிக்கைக் குழுவை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் படக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாவதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது 

மணிகண்டனின் திரைப்பயணம்

நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 'விக்ரம் வேதா', 'காலா', 'ஜெய் பீம்' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'குட் நைட்' திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து 'லவ்வர்', 'குடும்பஸ்தன்' ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். தற்போது முதல் முறையாக காவல்துறை பின்னணியிலான ஆக்‌ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், 'மக்கள் காவலன்' படத்துக்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படக்குழுவின் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்தே வெளியீட்டுத் தேதி குறித்த தெளிவு கிடைக்கும்.