இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் இரு தினங்களுக்கு முன்னர் காலமானார். 50க்கும் மேற்பட்ட அருமையான திரைப்படங்களை இயக்கிய கே. விஸ்வநாத் பல தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சங்கராபரணம்'. இப்படம் 43 ஆண்டுகளுக்கு முன்னர் பிப்ரவரி 2ம் தேதி வெளியானது. கர்நாடக சங்கீதத்தை மையமாக வைத்து வெளியான அப்படம் அமோகமான வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்தது. அப்படம் வெளியான அதே நாளில் அவர் காலமானது திரையுலத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
வாணி ஜெயராம் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றார். கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் தெலுங்கு திரைப்படமான அந்துலேனி கதாவின் பாடல்களுக்காக ஒரு முறை தேசிய விருது பெற்றார். அதன் பிறகு இயக்குனர் கே. விஸ்வநாத்தின் படங்களுக்காக இரண்டு முறை பெற்றுள்ளார். அதில் ஒன்று சங்கராபரணம் படத்தில் இடம்பெற்ற "மானஸ சஞ்சரரே..." பாடல் மற்றும் சுவாதி கிரணம் படத்தில் இடம்பெற்ற 'அனாதனியாரா ஹாரா' பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் மட்டுமின்றி கே. விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.