மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகிய இருவரின் படங்களும் ஒரே தேதியில் வெளியாகிறது.

Continues below advertisement

மம்மூட்டி - துல்கர்

மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக உள்ள இருவரும் இந்தியளவில் பிரபலமடைந்த நடிகர்களாக திகழ்கின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மம்மூட்டி தளபதி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். அதேபோல், அவரது மகனான துல்கர் சல்மானும் ஓ காதல் கண்மணி, வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இருவருமே தென்னிந்திய அளவில் பெரும் வணிக ஈர்ப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

தனுஷுடன் இணைந்த மம்மூட்டி

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் மம்மூட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிராகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் 2 ரிலீஸ் காரணமாக நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பேரன்பு படமே மம்மூட்டி நேரடியாக தமிழில் நடித்து ரிலீசான கடைசி படம். சுமார் 6 ஆண்டுகள் கழித்து மம்மூட்டி தமிழில் நடித்துள்ளதால் அவரை திரையில் காண தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். 

அப்பாவுடன் மோதும் துல்கர்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள  ஆகாசம்லோ ஒக்க தாரா திரைப்படமும் வருகிற நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியன் படமாக வெளியாகவுள்ளது. இதில், ஸ்ருதி ஹாசன், ஸ்வாசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சுவாரஸ்ய மோதல்

குறிப்பாக இருவரின் படங்களுமே கடந்த சில ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் சூழலில் இம்முறையும் அவ்வாறே வெளியாகவுள்ளது. மம்மூட்டி நடித்துள்ள ஓம் திரைப்படமும் துல்கர் சல்மானின் படத்தை போன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பான் இந்தியன் படமாக வெளியாகிறது. மேலும், இரண்டு படங்களுக்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், திரையரங்க ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.