மலையாள சினிமாவில் ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, 2026-ம் ஆண்டில் தொடர்ந்து வெளியாகிய மூன்று படங்களின் மூலம் இந்திய சினிமாவில் பேசப்படும் அரிய வசூல் சாதனையைப் பதிவு செய்துள்ளார். விஜய்யின் ‘ஜன நாயகன்’, சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, நிவின் பாலியின் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ ஆகிய மூன்று படங்களும் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ளன. இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று ரூ.200 கோடி வசூல் படங்களில் நடித்த மூன்றாவது இந்திய நடிகை என்ற பட்டியலில் மமிதா பைஜு இடம்பெற்றுள்ளார்.

Continues below advertisement

தீபிகா, ஆலியா வரிசையில் மமிதா பைஜூ

இந்த சாதனையை இதற்கு முன்பு தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் பதிவு செய்துள்ளனர். 2013-ல் தீபிகா நடித்த ‘யே ஜவானி ஹை திவானி’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா’ ஆகியவை ரூ.200 கோடியைத் தாண்டின.

2022-ல் ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியாவாடி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘பிரம்மாஸ்திரா’ ஆகிய படங்கள் இந்த மைல்கல்லை கடந்தன.

Continues below advertisement

மமிதாவின் மூன்று படங்கள்

முதலில் ஜூலை 23-ம் தேதி வெளியான ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் மமிதா நடித்தார். வர்த்தகத் தரவுகளின்படி இப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா, படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் மமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படம் உலக்ளவில் ரூ200 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. 

சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யுனிட்

மூன்றாவதாக ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தில் நிவின் பாலியுடன் மமிதா நடித்தார். வெளியான 11-வது நாளிலேயே ரூ.200 கோடி வசூலை எட்டியது. மலையாள மொழியில் படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பில் தமிழிலும் இப்படத்தை வெளியிட்டனர். முன்னதாக உலகளவில் அதிக வசூல் ஈட்டிய மலையாள திரைப்படமாக லோகா முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது அந்த இடத்தை பெத்லகேம் குடும்ப யுனிட் திரைப்படம் பிடித்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ312 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

மமிதாவின் திரைப்பயணத்தில் ‘பிரேமலு’ முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் ‘டூட்’, ‘ஜன நாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ என தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் அவரது படங்கள் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தின் வெற்றியுடன், மமிதா பைஜுவின் 2026-ம் ஆண்டு வசூல் பயணம் மேலும் பெரிய உயரத்தை எட்டியுள்ளது