சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் இழப்பில் இருந்தே மீளமுடியாமல் தவிக்கும் திரையுலகத்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக மலையாள திரையுலகின் நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் இன்று மரணமடைந்துள்ளார்.
நடிகை சுபி சுரேஷ் காலமானார் :
மலையாள திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகை மற்றும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரான 42 வயதான நடிகை சுபி சுரேஷ் இன்று காலை காலமானார். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சுபி சுரேஷ் சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் மறைவு மலையாள திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் :
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு நகைச்சுவை நடிகையாக பயணித்தவர். நகைச்சுவையுடன் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரின் நகைச்சுவையை ரசிக்க என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் மூலம் சுபி சுரேஷுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர ரோல்களிலும் நடித்துள்ளார். 2006ம் ஆண்டு இயக்குனர் ராஜசேனன் இயக்கத்தில் உருவான "கனக சிம்ஹசனம்" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரியானவர் சுபி சுரேஷ். அதனை தொடர்ந்து பஞ்சவர்ண தத்தை, ஆண்குட்டி, ட்ராமா என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் சுபி :
அவரின் நகைச்சுவை திறமையை பல வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றியுள்ளார். சூர்யா டிவியில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான நிகழ்ச்சி 'குட்டிபட்டாளம்'. இந்த நிகழ்ச்சியையும் சுபி சுரேஷ் தான் தொகுத்து வழங்கினார். அவரின் இறப்புக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.