மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இரட்டை இயக்குநர்கள் சுரேஷ் மற்றும் வினு. இவர்கள் இருவரும் இணைந்து மங்களம் வீட்டில் மனசேஸ்வரி, ஆயுஷ்மான் பவா உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். 1995ம் ஆண்டு ஜெயராம், வாணி விஸ்வநாத் நடிப்பில் வெளியான 'மங்களம் வீட்டில் மனசேஸ்வரி' திரைப்படம் மூலம் தான் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் வினு. 


கடைசியாக 2008ம் ஆண்டு வெளியான கனிச்சக்குளங்கரையில் சிபிஐ என்ற கிரைம் த்ரில்லர் திரைப்படம் தான் சுரேஷ் - வினு கூட்டணியில் வெளியான கடைசி திரைப்படம். இந்த இருவரில் ஒருவரான வினு உடல் குறைவு காரணமாக  ஜனவரி 10ம் (புதன்கிழமை) தேதி காலமானார். அவருக்கு வயது 73.


 



கடந்த 20 ஆண்டுகளாக சிங்காநெல்லூரில் வசித்து வந்த இயக்குநர் வினு உடல் நல குறைவால் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ அறிக்கைகளின் படி அவருக்கு வயிறு சம்பந்தமான நோய்க்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நோய்த்தொற்று ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.  


வினுவுக்கு மனைவி அனுராதா ராதாகிருஷ்ணன் மற்றும் இரு பிள்ளைகள் மோனிகா, நிமிஷ் உள்ளனர். வினுவின் இறுதி சடங்குகள் இன்று (ஜனவரி 11) காலை சிங்காநெல்லூர் மயானத்தில் நடைபெறவுள்ளது. 


வினுவின் மறைவு செய்தியை கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் சங்கம் (FEFKA) தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்தது. திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், வினுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.