கேரளாவில் 2017 ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து 5 வருடங்கள் கழித்து பேசிய பாவனாவிற்கு பல்வேறு தரப்பிலி இருந்து ஆதரவுகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது திரைப்பட இயக்குநர் அஞ்சலி மேனன் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 5 வருடங்கள் முன்பு நடிகை பாவனாவை காரில் கடத்தி சென்று பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவம் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் அறிவுறுத்தலின் பேரில்தான் நடந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார், மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு தலையாக செயல்பட்ட பல்சர் சுனில் மற்றும் அவருடன் சேர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கில் 74 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் நடிகர் திலீப், நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபோது எடுத்த வீடியோக்களை பார்த்து ரசித்ததாகவும், தன்னை கைது செய்த காவல் துறையினரை பழிவாங்க திட்டம் போட்டதாகவும் கூறினார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த நடிகை பாவனா, தற்போது முதன்முறையாக இதுகுறித்து இருதினம் முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.



அதில் அவர் கூறியிருந்தது: “இது எளிதான பயணமல்ல. பாதிக்கப்பட்டவளாக இருந்து தப்பி மீண்ட பயணம். கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய பெயரும், அடையாளமும் என்மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பாரம் காரணமாக நசுக்கப்பட்டு உள்ளன. நான் எந்த குற்றமும் செய்யவில்லை இருந்தாலும் என்னை அவமானப்படுத்தவும், ஒடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சமயங்களில் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க, சிலர் இருந்திருக்கிறார்கள். தப்போது எனக்காகப் பலர் குரல் கொடுத்து வருவதைக் கேட்கும்போது, நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனித்து இல்லை என்பதை உணர முடிகிறது. நீதியை நிலைநாட்டவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் நான் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி." என்று எழுதி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவு செய்திருந்தார்.



இந்த போஸ்டுகளை தங்கள் கணக்கிலும் ஷேர் செய்து மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டியும் மோகன்லாலும் பாவனாவிற்கு ஆதரவு அளித்துனர். அதுமட்டுமின்றி இந்தி திரைப்பட உலகில் இருந்தும் அவருக்கு நிறைய ஆதரவுகள் வந்துகொண்டு இருக்கின்றன. இந்தி நடிகை கோன்கோனா சென்சர்மாவும், ரிச்சா சத்தாவும், இயக்குனர் சோயா அக்தர் ஆகியோரும் பாவனாவிற்கு ஆதரவு அளித்துள்ளார்.


தற்போது இது குறித்து பேசிய இயக்குனர் அஞ்சலி மேனன், ஐந்தாண்டுகள் கழித்து அவருக்கு கிடைக்கும் ஆதரவு சிறிதுதான், எனினும் இது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்றார். மேலும், "இந்த ஐந்து ஆண்டுகளில் நம் சூப்பர்ஸ்டார்கள் இது இன்னொரு பெண்ணிற்கு நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்தார்கள்", என்று கேள்வி எழுப்பியுள்ளார். மம்முட்டி, மோகன்லால் ஆதரவை பதிவு செய்துள்ள நிலையில் அஞ்சலி மேனனின் கேள்வி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.