தமிழில் உருவாகும் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம், மலையாள நடிகர் ஷேன் நிகம் அறிமுகமாக உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’ .  புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன்  திரைப்படத்தின் கதையே வித்தியாசமாக உள்ளது. அதாவது ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையமாக அமைக்கப்பட்டுள்ளது.  ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக அமைத்துள்ளார்.


மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 






சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக ஷூட்டிங்கை நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.  படத்தின் நாயகி மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில்  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக மெட்ராஸ் காரன் படம் உருவாகவுள்ளது. 




மேலும் படிக்க: Actor Parthiban: குழந்தைகளை மையப்படுத்திய கதை.. நடிகர் பார்த்திபனின் அடுத்தப்படம் டைட்டில் இதுதான்!