வயநாடு நிலச்சரிவு


கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சனிக்கிழமை அன்று மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்த தடமே தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளன. தற்போது வரை 340-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


கேரள அரசுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர்கள்


இம்மாபெரும் பேரிடரில் உயிர்களோடு மிகப்பெரிய பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளில் இருந்து கேரள அரசு மீள்வதற்கு ஒட்டுமொத்த நாடே பிரார்த்தனை செய்து வருகிறது. மீட்பு பணிகள் மற்றும்  நிவாரணங்களுக்கு தேவையான நிதியுதவிகள் பல தரப்பில் இருந்து வந்து சேர்கின்றன. தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் தங்கள் சார்பாக கேரள அரசுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். நடிகர் விக்ரம் , சூர்யா , ஜோதிகா , கார்த்தி , நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் உள்ளிட்டவர்கள் நிதி வழங்கியுள்ளார்கள். மலையாள நடிகர் மம்மூட்டி , துல்கர் சல்மான் , ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நிதியுதவி செய்துள்ளார்கள். 


களத்திற்கு சென்று பார்வையிட்ட மோகன்லால்






தற்போது நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ராணுவ வீரர்களின் துணையோடு பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு சென்று கள நிலவரத்தை மோகன்லால் தெரிந்துகொண்டார். மேலும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கேரள அரசுக்கு 3 கோடி நிதி வழங்குவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களோடு ராணுவ வீரர்கள் துணை நிற்பது தனக்கு ஆறுதல் அளிப்பதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். 


திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் சார்பாக நிதியுதவி செய்திருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர்கள் இன்னும் கொஞ்சம் உதவிகளை செய்யலாம் என்கிற கருத்து நெட்டிசன்களால் முனவைக்கப் பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் மோகன்லால் ஒருவர் மட்டுமே 3 கோடி நிதி வழங்கியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன