டோலிவுட் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா மிகவும் பிரபலமான ஒரு குழந்தை நட்சத்திரமாக வளம் வருகிறார். தனது தந்தை நடித்த 'சர்க்காரு வாரி பாட' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் சித்தாரா. அப்படத்தில் இடம் பெற்ற பென்னி பாடலில் சிறப்பாக நடனமாடி இருந்தார். இந்த பாடலில் தனது சிறப்பான நடனத்திற்காக பாராட்டுகளை குவித்தவர் அதற்கான பயிற்சிகளை ஆனி மாஸ்டரிடம் எடுத்துக்கொண்டுள்ளார். சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சித்தாராவின் டான்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
திரிஷாவை போலவே ஆடும் மகேஷ் பாபு மகள் :
நடிகர் திரிஷா - மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'அத்தடு' திரைப்படத்தில் இடம்பெற்ற பில்லகலி பாடலுக்கு மிகவும் சுட்டி தனமாக நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சித்தாராவின் தந்தை நடிகர் மகேஷ் பாபு. " உன் கண்களில் இருக்கும் குறும்புத்தனத்தை, உன் நடனத்தில் இருக்கும் மகிழ்ச்சியை காட்ட விரும்புகிறேன் நேனி" என அழகான ஒரு குறிப்பையும் பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக திரிவிக்ரமுடன் கூட்டணி :
தற்போது நடிகர் மகேஷ் பாபு திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் SSMB28 ல் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இப்படம் மூலம் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் உருவான அத்தடு மற்றும் கலேஜா ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.
ஆகஸ்ட் ரிலீஸ் :
ஹாரிகா மற்றும் ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகேஷ் பாபு பிறந்தநாளுக்கு முன்னரே வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் 4 வெவ்வேறு செட்களில் படமாக்கப்படவுள்ளன.