கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக எடுக்கப்பட்டது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, நாவல் படித்தவர்களையும் சரி, படிக்காதவர்களையும் சரி இப்படம் வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் ரூ.500 கோடிக்கு மேல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி ரசிகர்களின் அமோக  வரவேற்பை பெற்றுள்ளது.  


 




மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பலரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 


பொன்னியின் செல்வன் படத்தில் சோழ அரசை பழிவாங்க துடிக்கும் ஒரு வெறித்தனமான கதாபத்திரத்தில் கன கச்சிதமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். நந்தினி கதாபாத்திரத்துக்கு அத்தனை அழகு சேர்த்த ஐஸ்வர்யா ராயின் சூட்சமமான பார்வை, அலட்டிக்கொள்ளாமல் வெறுப்பை உமிழும் வசனங்கள், காதலை வெளிப்படுத்தும் இடம் என அத்தனை இடங்களிலும் கைதட்டல்களை குவித்து விட்டார். பாண்டிய அரசின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நந்தினிக்காக மதுரை ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை மதுரை மாவட்டம் எங்கிலும் ஒட்டி தெறிக்க விட்டுள்ளனர். 


 



பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய மதுரை மாநகரை  சேர்ந்த இளைஞர்கள் பகை மாறா பாண்டியரின் வாரிசுகள் என்ற பெயரில் மதுரை மாநகர் எங்கும் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். 


அதில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை பிரிண்ட் செய்து "நந்தினி அக்கா! பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே, கடைசி ஆயுதமே, உலகின் முதல் பெண் பாண்டிய அரசியான மீனாட்சி அம்மனோட அருளாசியோட நம்மலயே சீண்டி பார்த்த சோழர்கள இனிமேல் நம்ம பக்கம் தல வைச்சு கூட படுக்க முடியாத அளவுக்கு அவங்கள முடிச்சுறு!" என அனல் தெறிக்கும் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர் பாண்டிய அரசின் வாரிசுகளாகவே என்றும் பிறக்க விரும்பும் பகை மறவா பாண்டியரின் வாரிசுகள் என அச்சிட்டுள்ளது. இந்த போஸ்டர் மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளது. 


பொன்னியின் செல்வன் முதல் பக்கம் வெளியான போதும் இதே போல தெறிக்க விடும் வசனங்களுடன் மதுரை மாநகரில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.