மெட்ரிட் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றுள்ளார் மகிமா நம்பியார். சாந்தகுமார் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான மகாமுனி திரைப்படத்துக்காக அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். 





இதுகுறித்து இயக்குநர் சாந்தகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் நடித்த நடிகர் ஆர்யாவும் இதற்காக மகிமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.





 
’ஸ்மைல்’, ‘ஸ்மோக்கி பிட்டர்’, ‘சிட்டி இன் ட்ரான்ஸ்’, ‘இன் தி ஷேட் ஆஃப் எ லீஃப்’ உள்ளிட்ட பதினேழு திரைப்படங்களில் நடித்தவர்கள் சிறந்த பெண் துணை நடிகருக்கான விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் மகிமா இந்த விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார். 


இதுகுறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள மகிமா, தனக்குச் சொல்ல வார்த்தைகளே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.  


 










இந்தப் படத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா அண்மையில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்து வெளியான சார்ப்பட்டா பரம்பரை திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னையின் பாக்சிங் வரலாற்றை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் ஆர்யாவுடன், பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட முன்னனி முகங்கள் இணைந்து நடித்திருந்தனர். மற்றொரு பக்கம் மகிமா நம்பியார் அய்ங்கரன், ஓ மை டாக் ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் ஆசிஃப் அலி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.