வீட்டுல இருந்து வேலை போயிட்டு இருக்கு. எப்போவும் வெளியே நேரம் செலவழிக்க பிடிக்காது. வீட்டுல மனைவி, பையன் கூட நேரம் செலவழிச்சிட்டு இருக்கேன். நிறைய கதைகள் பேசிட்டு சந்தோஷமா போயிட்டு இருக்கு. ஆனா, திரைத்துறை பணிகள் ரொம்ப வேகமா போகல. ரொம்ப அமைதியா வேலை நடந்துட்டு இருக்கு. '' என்று தொடர்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி 'தலைவி' மற்றும் 'ராஜமெளலி' குறித்து இதில் பேசியிருக்கிறார். 



'தலைவி' படம் பற்றி?


ஏ.எல்.விஜய் சார் கூட நிறைய படங்கள் வேலைப் பார்த்திருக்கேன். 'தலைவி' படத்தின் மூலமா வசனத்துல முதல் முறைய இணைஞ்சிருக்கேன். இந்த கதை டிஸ்கஷனுக்கு ஹைதாராபாத் போயிருந்தேன். விஜயேந்திர பிரசாத், அஜயன் பாலா ரெண்டு பேரும் திரைக்கதை விவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. இதொரு அரசியல் படமா நாங்க பார்க்கல. ஆண்கள் மட்டுமே அரசியல்ல இருக்க முடியும்ங்குற சூழல்ல ஒரு பெண் எப்படி தனியா ஜெயிச்சாங்கங்குறதுதான் கதை. இந்த பயணத்தை பதிவு செய்யும் விதமாகதான் 'தலைவி' இருக்கும். ரொம்ப சுவாரசியமான பல விஷயங்களை சொல்லியிருக்காங்க. கங்கனா, அரவிந்த்சாமி, சமுத்திரகனினு எல்லாருடைய நடிப்பும் நல்லா இருக்கும். 


வரலாறு சம்பந்தப்பட்ட படத்துக்கான வசனங்களை எடுக்குறப்போ ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்குமே?


உண்மை சம்பவங்களை அடிப்படையா வெச்சுட்டு இன்ஸ்பிரேஷனாகி எடுத்தப் படம்தான் 'தலைவி'. நிறைய விஷயங்கள் கற்பனையிலதான் இருக்கும். இதனால யார்கிட்டயும் பேசல. அந்த சமயத்துல பெண் கேரக்டர் என்ன பேசியிருக்கலாம்னு மனசுல தோணுதோ அதைதான் எழுதுனேன். ரஜினி சாரை பார்க்க போயிருந்தப்போ 'தலைவி' புரொஜக்ட் பற்றி சொன்னேன். எந்த மாதிரியான சீன்ஸ்ல வைக்குறீங்கனு கேட்டாங்க. பல சுவாரசியமான விஷயங்களை ரஜினி சார் சொன்னார். இவர் சொன்ன காட்சில வெச்ச ரொம்ப சூப்பரான சீன்ஸ் இன்னும் கிடைச்சிருக்கும் 'தலைவி 2' எடுத்தா ரஜினி சார் சொன்ன காட்சிலாம் வைக்கலாம்னு விஜய் சார்கிட்ட சொன்னேன். அப்பாகிட்ட சொன்னப்போவும், 'நல்ல வரும்னு' வாழ்த்து சொன்னார். 



'தலைவி'னு பேர் வைக்குறது பற்றி டைரக்டர் விஜய்க்கிட்ட பேசுனீங்களா?


முதல்ல, 'ஜெயா'னு வெக்கலாம்னு இருந்தோம். பொது பெயரா இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. ஏன்னா, மூணு மொழிகள்ல படம் வருது. பிசினஸ் மொழியில இதை யோசிச்சோம். இதுக்கு அப்புறம் 'தலைவி'னு தமிழ்ல வெச்சிட்டு மத்த மொழிகள்ல வேறு பெயரை வைக்கலாம்னு விஜய் சொன்னார். அப்போ, 'தலைவி' மூணு மொழிகளுக்கும் ஒத்து போற பேர்னு சொன்னேன். கங்கனாவும் 'தலைவி'னு இந்தில இருக்கட்டும்னு அழுத்தமா சொல்லிட்டாங்க. இங்கிலீஸ் சம்பந்தப்பட்ட டைட்டில் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எனக்கு தெரிஞ்சு பேன் இந்தியா படத்துக்கு தமிழ்ல பேர் வைக்குறது இதுதான் முதல் முறை. பாட்டோட படப்பிடிப்பு நடந்தப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருந்தேன். ரொம்ப பிரமாண்டமா இருந்தது. நிஜமாகவே நடந்து முடிந்த சில வரலாறு காட்சிகளை திரும்பவும் ரி கீரியேட் பண்ணியிருந்தாங்க. பார்க்கவே நல்லாயிருந்தது. 


'ஆர்ஆர்ஆர்' படம் எப்படி வந்திருக்கு?


முதல் டப்பிங் ஷெட்டியூல் முடிச்சிட்டு வந்திருக்கேன். ரொம்ப அற்புதமா வந்திருக்கு. படம் முழுக்க மெய்சிலிர்ப்பை உணர்ந்துக்கிட்டே இருக்கலாம். ராஜமெளலி படத்துல பிரமாண்டமான விஷயங்களை தாண்டி மனித உணர்வுகளை கொண்டாடியிருப்பார். கண்ணீர், மகிழ்ச்சி, காதல், சோகம், பொறாமைனு எல்லாத்தையும் அழகாக காட்ட கூடியவர். கம்பராமயணம் பற்றி பேசுவார். சில வரிகளை கோட் பண்ணி சொல்லுவார். 



பான் இந்தியா படத்துகாக மதன் கார்க்கி வேலை செய்யுறது எப்படிப்பட்ட பீல் கொடுக்குது?


இந்த மாதிரியான புரொஜக்ட்ல வேலைப் பார்க்குறப்போ நிறைய விஷயங்களை புதுசா கத்துக்க, பார்க்க முடியும். இவங்களுடைய கனவுலாம் ரொம்ப பெருசு. எல்லாருக்கும் பிடிக்க வைக்கணும்னு ஓடுறவங்க. சில வசங்களை தமிழ் மக்களுக்கு பிடிக்கும். ஆனா, தெலுங்கு இந்தி போறப்போ இதோட அழகு போயிரும். இதை எப்படி சரி செய்யலாம்னு பேசுவோம். யுனிவர்செல்லா இருக்கணும்னு நினைப்போம்.