நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தைப் பார்த்த நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி இருவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். 


மாவீரன் படம்  


தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறிய மடோன் அஸ்வின், அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தை இயக்கியுள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகைகள் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள்ளனர். இந்த படம் நாளை (ஜூலை 14) தியேட்டரில் வெளியாகிறது. 


இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக வெளியான படத்தின் டீசர், பாடல்கள் ,ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, மாவீரன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ படம் படுதோல்வியடைந்த நிலையில், மாவீரன் படம் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


விஜய்சேதுபதியின் குரல் 


மாவீரன் படத்தில் இடம்பெற்ற ‘வண்ணரப்பேட்டையில’ பாடலை நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை அதிதி ஷங்கரும் இணைந்து பாடியிருந்தனர்.  இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் சன் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள அசசரீ குரலுக்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் பேசியுள்ளார். மாவீரன் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 


மாவீரன் படத்தின் விமர்சனம் 


இந்நிலையில் மாவீரன் படத்தைப் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி, காஷ்மீரில் தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 'தலைவா.. சூப்பரா இருக்கு தலைவா படம்.. செம்மையா இருக்கு..  என முதன்முதலில் படத்தை முழுமையாகப் பார்த்து என்னைப் பாராட்டியவர் விஜய் சேதுபதி’ தான் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 


முன்னதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாவீரன் படத்தை பார்த்து விட்டு ,"👍.. 👍" என தம்ஸ்அப் காட்டி சிவகார்த்திகேயனை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.