நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில்  வெங்கட் பிரபு இயக்கி சிலம்பரசன் நடித்து அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குநராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன்சங்கர், சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருது ப்ரவீன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டுள்ளது.







கடந்தாண்டு வெளியான திரைப்படங்களிலே மாபெரும் வசூலைக் குவித்த படமாக தமிழ் திரையுலகில் மாநாடு இடம்பிடித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்புவிற்கு இந்த படம் மெகாஹிட்டாக அமைந்தது. டைம்லூப் திரைக்களத்தை  கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த நிலையில், மாநாடு படத்தின் 50வது நாள் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர்.


அதில், அவர் கூறியிருப்பதாவது, " மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும் அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும். நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது.



 


50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணையானது. இடையில் புதுப்படங்கள் வந்து போனாலும் மாநாடு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டான். வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல. வெற்றி தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் என்பதாக இந்த வெற்றி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.


இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன்,  இயக்குநர் வெங்கட் பிரபு, பைனான்சியர் உத்தம் சந்த் ஆகியோருக்கும், அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள்,  வாங்கிய விநியோகஸ்தர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பண்பலை நண்பர்கள் மற்ற மொழியிலும் இப்படத்தைக் கொண்டு சேர்த்த பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும், என் தாய் தந்தைக்கும்  இவ்வெற்றியை சமர்ப்பித்து மகிழ்கிறேன்."


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.