மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாக உள்ள திரைப்படம்  மாமன்னன்.


பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில்,  வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத இறுதியில்  மாமன்னன் படத்தின் போஸ்டர்கள் முதன்முறையாக வெளியாகி கவனமீர்த்தன. 


தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல் இணையத்தில் இன்று வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.


ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலை பாடியுள்ளதுடன் தன் க்யூட்டான நடன அசைவுகளால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்து நெட்டிசன்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். பொதுவாக பெப்பியான பாடல்களை உற்சாகமாகப் பாடி அசத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலில் குழந்தைகளுடன் இணைந்து, க்யூட்டான நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.


நடன அமைப்பாளர் சாண்டி, இயக்குநர் மாரி செல்வராஜ், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் இந்தப் பாடலில் தோன்றியுள்ளனர்.  இந்நிலையில் சாண்டி மாஸ்டரின் கொரியோகிராஃபியும் நெட்டிசன்களை ஈர்த்து பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடனம் அமைத்தது பெருமை என சாண்டி ட்வீட் செய்துள்ளார்.  சாண்டியின் இந்த ட்வீட் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






“புழு துளையிட்ட பழத்தின் விதையாக, குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்து போகிறேன்” எனும் மாரி செல்வராஜின் கவிதையுடன் தொடங்கும் இப்பாடல், சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வருகிறது.


முன்னதாக இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு முதன்முறையாகப் பாடியுள்ள ‘ராசாக்கண்ணு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக யுகபாரதியின் பாடல் வரிகளும் வடிவேலுவின் கிராமிய மற்றும் உணர்வுப்பூர்வமான குரலும் இணைந்து இப்பாடலுக்கு பெரும் ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது. 


‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.