தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். ஒரு குணச்சித்திர நடிகரான  எம். எஸ். பாஸ்கர் முதல்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் 'அக்கரன்'. விஸ்வநாத், வெண்பா, நமோ நாராயணா, கார்த்திக் சந்திரசேகர், ஆகாஷ் பிரேம்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அருண் கே. பிரசாத் இயக்கியுள்ளார். 


 



இப்படத்தின் மூவி லான்ச் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து திருமதி பிரேமலதா அறிவித்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரேமலதா பேசுகையில் "இன்றைய தினம் கேப்டன் விஜயகாந்த் 48வது நினைவு நாள். இன்றைய தினத்தில் கேப்டனின் கோயிலில் தான் தன்னுடைய படத்தை லான்ச் செய்ய வேண்டும் என ஒரு வாரமாக படக்குழுவினர் காத்திருந்தனர். 


எங்கள் அன்பு சகோதரர் எம்.எஸ். பாஸ்கர் முதல் முறையாக ஹீரோவாக நடித்து வெளியாக இருக்கும் இப்படத்தின் பெயர் 'அக்கரன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. கேப்டன் ஆசியோடும், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவோடும் வெற்றி பெற வேண்டும் என தேமுதிக கட்சியின் சார்பாகவும், கேப்டன் குடும்பம் சார்பாகவும், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் படக்குழுவினருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.   


 




எம்.எஸ். பாஸ்கர் அண்ணன் என்றுமே கேப்டன் இதயத்தில் இடம் பிடித்தவர். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு நட்புடன் வந்து செல்வார். அவரின் சகோதரி என்னுடைய மகன்களுக்கு டியூஷன் எடுப்பாங்க. அந்த அளவுக்கு அவருடைய குடும்பமும் எங்களுடைய குடும்பமும் நல்ல உறவோடு பழகி வந்தோம். என்றுமே அவருக்கும் அவரின் திரைப்பயணத்திற்கும் அவரின் படக்குழுவினருக்கு எங்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும்". 


நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசுகையில் "நான் இன்று வரை ஒரு நடிகனாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் அண்ணன் தான். அண்ணன் தான் நடிகர் சங்கத்தில் கார்டு வாங்கி கொடுத்தார். இதை நான் அவருக்கு செலுத்தும்  நன்றிக்கடன் என சொல்வதை விட மேலானது. தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழுவினர் என அனைவரும் சேர்ந்து தான் இப்படத்தை கேப்டனின் காலடியில் வைத்து தான் அறிவிப்பை வெளியிட வேண்டும் என முடிவு செய்து இருந்தோம்.


 


அண்ணன் இன்று இருந்திருந்தால் அண்ணனும், அண்ணியும் சேர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தார். அவர் நம்மோடு இல்லை என சொல்ல முடியாது. நம்முடைய மனங்களில் என்றுமே அவர் குடியிருந்து நம்மை ஆசீர்வதிப்பார். அவரின் ஆசியால் நமக்கு மேலும் மேலும் பல வெற்றிகளை கொடுப்பார். இப்படத்தை நிச்சயம் வெற்றி அடைய செய்வார்"