'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். மேலும் ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


 



ரசிகர்களின் எதிர்பார்ப்பு :


'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது. படத்தின் டீசர் முன்னதாக வெளியான நிலையில், அதில் ரஜினியின் மாஸான என்ட்ரி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது. 


 



எகிறும் வியூஸ் :


'லால் சலாம்' படத்தில் முதல் சிங்கிள் பாடலாக 'தேர் திருவிழா...' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஏ புள்ள' பாடல் வெளியானது. சித் ஸ்ரீராம் மயக்கும் குரலில் கிராமத்து மெலடியாக வெளியான இப்பாடலின் லிரிக்கல் வீடியோ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி வெளியானது. கபிலன் இப்பாடலின் வரிகளை எழுதி இருந்தார். கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது 'ஏ புள்ள' பாடல். ஒரு சில பாடல்கள் முதல் முறையே மக்களை கவர்ந்து விடும். இந்த மெலடி பாடலுக்கும் அந்த ரகத்தை தான் சேரும். 


 



மேக்கிங் வீடியோ :


'ஏ புள்ள' பாடலின் மேக்கிங் வீடியோவின் ஒரு பகுதியை லைகா நிறுவனம் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளது. அந்த அருமையான வரிகளுக்கும் இசைக்கும் பின்னால் ஒலிக்கும் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரல் ஒரு மேஜிக்கல் மொமெண்ட்டை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இந்தப் பாடலின் ட்ராக் எப்படி உயிர் பெற்றது என்பதற்கான ஒரு சிறிய வீடியோவை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது.


 






ஜெயிலருக்கு டஃப் கொடுக்கிறது : 


'லால் சலாம்' திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளதால் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் 700 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என்றாலும், இது அவரின் படமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இப்படத்திற்கான வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது. எனவே ஜெயிலர் படத்திற்கு டஃப் கொடுக்கத் தயாராகிவிட்டது லால் சலாம் திரைப்படம்.