”லப்பர் பந்து” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்துள்ள படக்குழு அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவரும், நெஞ்சுக்கு நீதி படத்துக்கு வசனம் எழுதியவருமான பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் நிலையில், ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ”லப்பர் பந்து ”படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளையும் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகர் ஹரிஷ் கல்யான் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு சில நெகடிவ் விமர்சனங்களையும் பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த, அரிது அரிது, சட்டப்படி குற்றம் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. 2017 ஆம் ஆண்டு தனியார் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஹரிஷ் கல்யாண். இதில் இராண்டாம் இடத்தை பிடித்தார்.
இதனையடுத்து அவர் 2018ஆம் ஆண்டு சக பிக்பாஸ் போட்டியாளர் ரைசா வில்சனுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்தும் அவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
நடிகர் தினேஷ் அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் திரை உலகில் பிரபலமானவர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகம் நல்ல வரவேற்பை பெற்றது. குக்கூ என்ற திரைப்படத்திலும் இவர் தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது, நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் தயாராகி வரும் லப்பர் பந்து திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.