தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்சியின் மூலம்  பிரபலமானவர் லாஸ்லியா மரியநேசன். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படம், பொது நிகழ்ச்சிகள், மாடலிங் என பிஸியாகிப்போனார் லாஸ்லியா.  தற்போது ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் உருவாகிவரும் “ப்ரண்ட்ஷிப்” படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா. படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஸ்டாலின் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் இவருடன் கிரிக்கெட் வீரr ஹர்பஜன் சிங்கும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்து வருகிறார்.



இந்நிலையில் படத்தின் பாடல் ஒன்று கடந்த 3 ஆம் தேதி வெளியானது. ”அடிச்சு பறக்கவிடுமா” என தொடங்கும் அந்த பாடலை தேனிசை தென்றல்  தேவா பாடியுள்ளார். கூடவே படத்தின் நாயகி லாஸ்லியாவும் பாடலின் ஒரு பகுதியை பாடியுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பாடகரும் நடிகருமான முகேன் உடன் இணைந்து பாடல்களை பாடிக்கொண்டிருப்பார் லாஸ்லியா. லாஸ்லியாவின் திறமையை அறிந்த இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இந்த பாடல் தற்போது வீடியோ தளமான யூடியூப்பில் ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



பாடலுடன் சேர்த்து  மேக்கிங் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர் படக்குழு. கடந்த மூன்றாம் தேதி ஹர்பஜன் சிங்கின் 41 வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பாடல் வெளியிடப்பட்டிருந்தது. ஹர்பஜன் சிங் ப்ரண்ட்ஷிப் படம் மட்டுமல்லாமல் சந்தானம் நடிப்பில் உருவாகும் டிக்கிலோனா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். அதேபோல லாஸ்லியா தற்போது விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் ப்ரண்ட்ஷிப் படம் தவிர்த்து கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் லாஸ்லியா நடிக்க உள்ளார். மலையாளத்தில் சுராஜ் வென்ஜாரமூடு, சௌபின் ஷகிர் நடிப்பில்  கடந்த 2019-ல் வெளியான மலையாளத் திரைப்படம் ஆன்ட்ராயிடு குஞ்சப்பன். ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தைதான் தமிழில் கூகுள் குட்டப்பன் என ரீமேக் செய்ய உள்ளனர். இந்த படத்தினை கே.எஸ்.ரவிக்குமாரின்  உதவி இயக்குனர் சபரி இயக்க உள்ளார்.மேலும் கே.எஸ்.ரவிக்குமாரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரம். தவிர தர்ஷன் , யோகி பாபு உள்ளிட்டோரும் படத்தில் நடிக்க உள்ளனர். கதாநாயகியாக அடுத்தடுத்த படங்களில் களமிறங்கியிருக்கும் லாஸ்லியாவின் அறிமுகப்படமான  ப்ரண்ட்ஷிப் திரைப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திரையரங்குகள் திறந்த பின்னர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.