லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூலி படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கைதி முதல் பாகம் வெளியாகி ஆறு ஆண்கள் கடந்துள்ள நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்து வருகிறார்கள்.
நாயகனாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். கூலி படத்தில் சொதப்பிய லோகேஷ் கார்த்தியின் கைதி 2 படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தன. எல்.சி.யு கதையுலகின் மிக முக்கியமான படமாக கைதி 2 திரைப்படம் கருதப்படுகிறது. கூலி படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக கைதி 2 படத்தை லோகேஷ் இயக்கவிருந்தார். ஆனால் இதற்கிடையில் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் டிசி படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டானார்.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் வமிகா கப்பி நடிக்கும் படம் டிசி. அண்மையில் இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. காதல் ஆக்ஷன் கலந்து உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அல்லு அர்ஜூனை இயக்க திட்டம்
கூலி படத்தைத் தொடர்ந்து ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ரஜினி கமலுக்கு லோகேஷின் கதை மேல் உடன்பாடு இல்லாததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அடுத்தபடியாக முன்னணி தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூனிடம் லோகேஷ் கதை சொல்லியிருப்பதாகவும் இந்த படம் கிட்டதட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அல்லு அர்ஜூன் அட்லீ இயக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தின் பணிகள் முடிவடைந்ததும் லோகேஷ் கனகராஜின் படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கார்த்தியை டீலில் விட்ட லோகேஷ்
கைதி திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். கூலி படத்திற்கு அடுத்தபடியாக கைதி 2 படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லோகேஷ் தெலுங்கு திரையுலகம் பக்கம் திரும்பியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைதி 2 படத்திற்காக கார்த்தியை 6 ஆண்டுகள் லோகேஷ் காக்க வைத்துள்ளதும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது .