Fight Club: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் வழங்கும்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


அண்மையில் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும், அதன் மூலம் நண்பர்கள் மற்றும் அறிமுக இயக்குநர்களின் படைப்புக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இன்று மாலை ” ஃபைட் கிளப்” என்ற பெயரில் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


திரைப்பட இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் படத்தில் விஜய் குமார் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபைட் கிளப் படத்தின் கதையை சசி எழுதியுள்ளார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். படத்தின் கிரியேட்டிவ் புரடியூசராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை, ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதாநாயகனான விஜய் குமாரின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. 


இதனிடையே இப்படத்தினை நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவர் சொந்தமாக தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக வழங்குகிறார் என்பதும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'ஃபைட் கிளப்'புடன் கரம் கோர்த்திருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.