தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 


அந்த வகையில் ஜெய்பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதே சமயம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது சூப்பர் ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 




மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 'தலைவர் 171' திரைப்படம் உருவாக உள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அது தொடர்பான சில கேள்விகள் இயக்குநர்  லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "தலைவர் 171 படத்திற்கான கதையை எழுதி கொண்டு இருக்கிறேன். நடிகர் ரஜினிகாந்துடன் கலந்து ஆலோசனை செய்து எழுதி கொண்டு இருக்கிறேன். இன்னும் எழுதுவதற்கு நிறையவே இருக்கிறது. இரண்டு மூன்று மாதங்கள் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு நேரம் இருப்பதால் என்னுடைய முழு சிந்தனையும் திரைக்கதையை எழுதுவதில் தான் இருக்கிறது. அதனால் தான் வெளி இடங்களுக்கு எங்கும் வருவதில்லை. கடந்த ஒன்றரை மாத காலமாக மொபைல் போன் கூட பயன்படுத்துவதில்லை. நிறைய பேர் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் கனெட்டாக முடியாததற்கு அது தான் காரணம்" என்றார். 


அதே போல லியோ பார்ட் 2 அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளிக்கையில் இதற்கு வேறு ஒரு நாள் பதில் அளிக்கிறேன். தற்போது இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேட்கவும் என கூறியிருந்தார். 


 



'தலைவர் 171' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் சொல்லி இருக்கும் பதிலை பார்க்கையில் அது இன்னும் கொஞ்ச காலம் எடுத்து கொள்ளும் என தோன்றுகிறது. இப்படத்தின் திரைக்கதை முழுவதும் ரெடியான பிறகே படத்தின் பணிகள் விறுவிறுப்படையும் என பேசப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த்திற்கான படம் என்பதால் அதன் திரைக்கதை அவருக்கு ஏற்றார் போல் மாஸாக இருக்க வேண்டும் என்பதால் தான் இந்த கால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்கின்றன நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.