கூலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கூலி படத்தின் தோல்வியால் இந்தியில் ஆமிர் கானை வைத்து அவர் இயக்கவிருந்த சூப்பர் ஹீரோ படமும் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைநழுவிப்போன ஆமிர் கான் படம்
சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்கிற சூப்பர் ஹீரோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்தார். சூர்யாவின் கால் ஷீட் தாமதம் ஏற்பட்டதால் இந்த படத்தின் கதையை பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு ஓக்கே செய்தார். இது குறித்து அனைவரும் பரபரப்பாக பேசி வந்த நிலையில் தற்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்ததால் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மறுபக்கம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் இருவரையும் வைத்து புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். அண்மையில் சைமா விருது விழாவில் கமல் இந்த தகவலை உறுதிசெய்தார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
அடுத்தடுத்து அடி வாங்கும் லோகேஷ் கனகராஜ்
கூலி படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கூலி படம் வெளியான பின் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் 'ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு படம் பண்ண முடியாது' என பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் ரஜினி கமலை இயக்கும் தகுதி லோகேஷ் கனகராஜூக்கு இல்லை என்றும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். கூலி படத்திற்கு லோகேஷ் ரூ 50 கோடி சம்பளமாக பெற்றார். ஆனால் வசூல் ரீதியான தோல்விக்குப் பின் அவர் அடுத்தபடியாக இயக்கவிருக்கும் கைதி 2 படத்திற்கும் அதிகப்படியான சம்பளம் கேட்டுள்ளதாகவும் இதனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஓடிடியில் வெளியான கூலி
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான கூலி திரைப்படம் உலகளவில் 500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்கைத் தொடர்ந்து தற்போது அமேசான் பிரை ஓடிடி தளத்தில் கூலி வெளியாகியுள்ளது. நாகர்ஜூனா , சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர் , உபேந்திரா , ஆமிர் கான் , கண்ணா ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.