அமரன்


விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தனது கரியரைத் தொடங்கியவர் சிவகார்த்திகேயன். துணை கதாபாத்திரம் ,காமெடி நாயகன் என படிப்படியாக முன்னேறி தற்போது ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். வரும்  அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிறது. சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அமரன் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


தமிழ் சினிமாவில்  நடிகர் விஜய்க்குப்பின்  குழந்தைகள், இளைஞர்கள் , ஃபேமிலி ஆடியன்ஸ் என மூன்று தரப்பு ரசிகர்களையும் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தி கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்த காட்சி சிவகார்த்திகேயன் தான் அடுத்து விஜயின் இடத்தை பிடிக்கப் போகிறார் என்பதை உறுதிபடுத்தியுள்ளது


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்


அமரன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவரிடம் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது . இந்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் இப்படி பதிலளித்தார் ' நானும் சிவகார்த்திகேயனும் ஒரு படம் பண்ண ரொம்ப காலமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுவுமில்லாமல் இப்போதான் அவர் துப்பாக்கியை கையில் எடுத்துவிட்டார். அதனால் கூடிய விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் " என லோகேஷ் கனகராஜ் கூறினார்.


கூலி






லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். உபேந்திரா , சத்யராஜ் , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , நாகர்ஜூனா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அடுத்தபடியாக கைதி 2 , படத்தை அவர் இயக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில் இந்த படமும் எல்.சி.யுவில் இணையுமா என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.