வசூல் வேட்டையில் லோகா சாப்டர் 1
துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான லோகா திரைப்படம் மலையாள சினிமாவில் வசூல் சாதனை படைத்துள்ளது. தெலுங்கு , தமிழ் , இந்தி ஆகிய பிற மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் பிற மாநிலங்களிலும் படத்தை டப் செய்து வெளியிட்டுள்ளார்கள். லோகா திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ 275 கோடி வசூலித்து 300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. மலையாளத்தின் மோகன்லாலின் எம்புரான் பட வசூலைக் காட்டிலும் அதிக வசூல் ஈட்டிய மலையாள படமாக சாதனை படைத்துள்ளது.
அடுத்தடுத்த பாகங்கள்
லோகா படத்தை மொத்தம் 5 பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. டொவினோ தாமஸ் , துல்கர் சல்மான் என ஒவ்வொரு பாகமும் லோகா சினிமேட்டிக் யுனிவர்ஸில் உள்ள கதாபாத்திரங்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். முதல் பாகத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களுக்கு இப்போதிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் லோகா படத்தின் மூலம் இயக்குநர்கள் மத்தியில் பரவலாக கவனமீர்த்துள்ளார் டோமினிக் அருண்.
தனுஷ் அறிமுகப்படுத்திய டோமினிக் அருண்
2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஸ்டைல் என்கிற படத்தில் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானவர் டோமினிக் அருண். 2017 ஆம் ஆண்டு டொவினோ தாமஸ் நடித்த தரங்கம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஃபேண்டஸி டார்க் காமெடி திரைப்படமாக உருவான இப்படத்தை தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. தனுஷ் மலையாளத்தில் தயாரித்த ஒரே படம் இது. தற்போது லோகா படத்தின் வெற்றிக்குப் பின் லோகா சூப்பர் ஹீரோ கதையுலகில் தனுஷ் இணைவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இட்லி கடை
தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. டான் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன் , சமுத்திரகனி , ஷாலினி பாண்டே , ராஜ்கிரண் , அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.