குயிலி


அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றத

Continues below advertisement


இயக்குநர் ப. முருகசாமி பேசுகையில்,


''இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது.  இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவை பார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,'' என்றார். 


இசையமைப்பாளர் ஜூ ஸ்மித் பேசுகையில்


''முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை.  இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை தொலைபேசி மூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம் தயாரித்தால் நீ தான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார்.  சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார்.  இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, 'குயிலி' கமர்ஷியல் திரைப்படம் அல்ல,vகருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,'' என்றார். 


நடிகை லிசி ஆண்டனி பேசுகையில்,


''சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன். இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது.  இந்தப் படத்திற்கு 'குயிலி' என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.  இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், '


'எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன்.  இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, 'கல்லூரி' படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன். 'பொன்னியின் செல்வன்', 'அசுரன்' ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன்.  இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இதுதான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 


தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில்


''இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  


முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் 'ஏமாற்றாதே', 'பொய் சொல்லாதே', 'திருடாதே', 'கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்' என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த 'குயிலி' பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். 


இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,'' என்றார். 


நடிகை தாஷ்மிகா பேசுகையில்,


''இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார்.