96வது ஆஸ்கர் விருது விழா
திரைப்பட உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது (Oscar Awards 2024) வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் நேற்று ஜனவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்டன.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர், கிரேட்டா கெர்விக் இயக்கிய பார்பீ, மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கிய கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன் உள்ளிட்ட படங்கள் அதிக பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறிப்பிட்டு சொல்லும் வகையில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு அதிகளவில் பெண் இயக்குநர்களின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்கர் விருதுகளில் பெண்கள்!
இந்த ஆண்டுக்கு முன்புவரை சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் மொத்தம் 591 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த 591 படங்களில் நான்கு ஆண்டுகளில் 8 பெண் இயக்குநர்களின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
காத்ரீன் பைக்லோ, லோன் ஷெர்ஃபிக், லிசா சோலோடென்கோ,டெப்ரா கிரானிக், க்ளோய் ஸாவோ , எமரால்டு ஃபென்னல், சியான் ஹெடர், ஜேன் சாம்பியன் உள்ளிட்டவர்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்வாகியுள்ளார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு பெண் தயாரிப்பாளர்கள் தயாரித்து 8 படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தகுந்த ஒரு வரலாற்று நிகழ்வுதான்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கருக்கு சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் மூன்று பெண் இயக்குநர்களின் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஜஸ்டின் ட்ரைட் இயக்கிய ‘தி அனாடமி ஆஃப் ஏ ஃபால்’, செலீன் சாங் இயக்கிய ‘பாஸ்ட் லைவ்ஸ்’, கிரெட்டா கெர்விக் இயக்கிய ‘பார்பீ’ ஆகிய படங்கள் இந்த வருடம் போட்டியில் உள்ளன.
கடந்த ஆண்டு ஓப்பனெஹெய்மர் படத்துடன் வெளியாகிய பார்பீ திரைப்படம் ஹாலிவுட்டில் பெண் இயக்குநர் இயக்கிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு அதிக பிரிவுகளின் கீழ் இந்தப் படம் தேர்வாகியுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு வெளியாகிய பாஸ்ட் லைஃவ்ஸ் படம் உலகளவில் அங்கீகாரம் பெற்றது. இந்த இரண்டு படங்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.