மலைகோட்டை வாலிபன்


மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மலைல்கோட்டை வாலிபன். ஈ.மா.யு, ஜல்லிகட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மது நீலகண்டன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.


சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பரேடி, சஞ்சனா சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஆண்டு மலையாள சினிமா எதிர்நோக்கி இருக்கும் முக்கிய படங்களுள் ஒன்றாக இப்படம் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் டீசர் ரசிகர்ளிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.


முதல் பாடல்


 நடிகர் மோகன்லால் இந்தப் படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். மேலும் உண்மையான மல்யுத்த வீரரின் வாழ்க்கையைத் தழுவி உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மோகன் லால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இப்படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


தற்போது இந்தப் படத்தில் புன்னார காட்டிலே பூவனத்தில் என்கிற பாடல் வெளியாகி இருக்கிறது. இரவு நேரத்தின் அமைதியில் ஒலிக்கும் இனிமையான இந்தப் பாடல் இரண்டு காதலர்களை மையப்படுத்தி அமைந்திருக்கிறது. பாடலின் கடைசி சில நொடிகளுக்கு மட்டும் ரசிகர்களுக்கு மோகன்லால் ஒரு சிறிய எண்ட்ரி கொடுத்துவிட்டு போகிறார். இந்தப் பாடலை  நடிகர் மோகன்லால் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.






லிஜோ ஜோஸ் பெல்லிசேரி


மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி நாயகன் என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது அங்கமாலி டைரீஸ், ஈ.மா.யு , ஜல்லிகட்டு ஆகிய படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றன. மம்மூட்டி நடித்து இவர் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் நடிகர் மம்மூட்டிக்கு கேரள மாநில அரசு விருதை பெற்றுத் தந்தது. இயக்குநர் மணிரத்னம் தனக்கு பிடித்த சமகாலத்து இயக்குநர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.