திருவள்ளூரில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார். தண்ணீர் பிரச்சினையையும், மூடப்படாத ஆழ்துளை கிணற்றை மூடாமல் விடுவதால் ஏற்படும் ஆபத்தையும் பற்றி விளக்கிய அப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அகரம் காலனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடைபெற்றது. அப்போது மின்சாரம் தாக்கியதில் சண்முகம் என்ற லைட்மேன் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ரஞ்சித் என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.