பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பில் உருவாகும் “Lets Get Married” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 


கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்றழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், இராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 




யாரும் எதிர்பாராத வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட்  தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தமிழில் படம் உருவாகிறது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 


 இந்த படத்திற்கு  “Lets Get Married” என்று பெயரிடப்பட்டுள்ளது. தோனி படத் தயாரிப்பில் களமிறங்குவது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் ஆன ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போஸ்டரை தோனி வெளியிட்டார். மேலும் இந்த போஸ்டர் மோதிரம் ஒன்றிற்குள் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.