டைட்டானிக் நாயகன்  லியோனார்டோ டிகாப்ரியோ.  ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். டைட்டானிக் படத்தில் ஊண் உருக உயிர் உருக ரோஸை காதலித்த இவர், தனது சொந்த வாழ்க்கையிலும்  நிறைய ’ரோஸ்’களை தேடித் தேடி காதல் கொள்கிறாராம் . இவரது காதல் கதை எப்போதும் ஹாலிவுட் பக்கங்களில் முக்கிய இடம் பிடித்து விடுகிறது. அவ்வகையில் அவர் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாடல் அழகி நீலம் கில்லிடம் தனது காதலை கொட்டி நிரப்பி வருகிறாராம். சமீபத்தில் லண்டனில் உள்ள சில்டர்ன் ஃபயர்ஹவுஸில் இருவரும் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில்  லியோனார்டோ டிகாப்ரியோவின் தாயார் இர்மெலின் இண்டென்பிர்கெனும் இருந்துள்ளார். 


ஆனால், நீலம் கில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். லியானார்டோ டிகாப்ரியோ தனது திரைப்படமான கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரையிடலுக்காக அந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.  இவர்களைப் பற்றிய இந்த தகவல் ஹாலிவுட் பக்கங்களை நிரப்பி வந்தாலும், இருவரும் இது குறித்து எதுவும் கூறாமல் கப்சிப் என இருக்கிறார்கள். 


 

லியோனார்டோ டிகாப்ரியோவின் காதல் கதைகள்

 

லியோனார்டோ டிகாப்ரியோ முன்பு நடிகையும் மாடலுமான கமிலா மோரோனுடன் காதல் வயப்பட்டு இருந்தார். இவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் ஹாலிவுட்டில் வலம் வர, 2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் இருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைந்து வந்தனர். இதனைவைத்து இருவரும் காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்ததாகக் கூறப்பட்ட பின்னர் 2022-இல் அவர்கள் தங்களது காதலை மேற்கொண்டு வளர்க்காமல் முறித்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, டிகாப்ரியோ சூப்பர் மாடல் ஜிகி ஹடிடுடன் டேட்டிங்கில் இருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்தது. அதற்கு ஏற்றதைப் போல், நியூயார்க்கில் உள்ள ஒரு கிளப்பில் இருந்து லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜிகி ஹடிட் ஆகியோரின் புகைப்படம் செப்டம்பர் 2022-இல் வைரலானது.

 

அதன் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரியில், டிகாப்ரியோ 19 வயதான மாடல்  அழகி ஈடன் பொலானியுடன் ஒரு இசை நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகவே, இதனால்  டிகாப்ரியோ   ஈடன் பொலானி   டேட்டிங் செய்கிறார் என்ற தகவலை ஹாலிவுட் ஊடகங்கள் பகிரத் தொடங்கின. ஆனால் உண்மையில், இருவரும் குழுவாக இணைந்து விருந்தில் கலந்துகொண்டதையே அவ்வாறு பகிர்ந்துள்ளனர். உடன் பல ஹாலிவுட் பிரபலங்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.